தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். அண்மையில் நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரிக்கான அறிவிப்பு விழாவில் மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிக்க பரிசீலினை நடைபெறுகிறது என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது. அந்த வகையில் முதல்வர் பழனிசாமி 38 வது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவித்துள்ளார்.