அரசு - தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட புதிய மகப்பேறு சட்டம், அவர்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது. 18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

அரசு துறைகளில் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும்வகையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்ய சபாவில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அரசு அலுவலகங்களில் 26 வாரங்கள், முழு சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில், 12 வாரங்கள் மட்டுமே, பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் புதிய மகப்பேறு விடுப்பு கொள்கை அமல்படுத்தப்பட்டால் 18 லட்சம் பெண்கள் வேலையில் சேருவதில் சிக்கல் உருவாகும் என்று வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனமான டீம் லீஸ் சர்வீசஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 12 வாரங்களாக முந்தைய மகப்பேறு சட்டத்தில் இருந்தது. இந்த விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து புதிய சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்தது. பெண்களுக்குச் சலுகை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தினால் வேலை இழக்கும் சூழல் உருவாகும். 

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு நீண்ட கால விடுமுறை அளிப்பது கடினம். இந்தச் சட்டத்தின் காரணமாக, பல நிறுவனங்கள் பெண்களை பணியமர்த்த யோசிக்கும் அல்லது குறைத்துக்கொள்ளும் அல்லது முற்றிலுமாக தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது. 

இந்த புதிய சட்டத்தால், அடுத்த நிதியாண்டுக்குள், சிறு, குறுதொழில்கள் உட்பட10 துறைகளில் பணிபுரியும் 11 லட்சம் முதல் 18 லட்சம் பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் டீம் லீஸ் சர்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.