Asianet News Tamil

இந்திய பொருளாதார வளர்ச்சியை சீரழித்த ஊழல் பெருச்சாலிகள்..! அம்பலப்பட்ட அட்டூழியங்கள்..!

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள் இருந்தும், அந்த தருணங்களை தவறவிட்டு நிற்பதற்கு, சில ஊழல் புரையோடிய அரசியல்வாதிகளின் சுயநலம் தான் காரணம் என்பதை தற்போது நீதிமன்றங்களில் நடந்துவரும் பல்வேறு பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகள் அம்பலப்படுத்துகின்றன. 
 

massive corruption network of india is the barrier for nation economy development
Author
Chennai, First Published May 15, 2020, 7:59 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா பாதிப்பால் உலக பொருளாதாரமே கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவான சீனாவிலிருந்து வெளியேற வெளிநாட்டு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அப்படி சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் மீது பட்டுள்ளது. சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை கவரும் முனைப்பில் இருக்கும் இந்திய அரசு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

இந்தியாவில் அபரிமிதமான சக்தியும் மனிதவளமும் பரந்த நிலப்பரப்பும் இருந்தும் கூட, சரியான திட்டமிடல் இல்லாததால், அவற்றையெல்லாம் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால் இந்திய பொருளாதாரம் இந்நேரம் அடைந்திருக்க வளர்ச்சியை அடையமுடியாமல் போனது. இந்தியாவின் திராணிக்கு, செய்ய முடிந்த ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய தவறியதால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவை எதிர்க்கக்கூடிய வல்லமையை பெற்றிருந்தும், இந்தியாவால் சீனாவை எதிர்க்க முடியவில்லை.

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள் இருந்தும், அந்த தருணங்களை தவறவிட்டு நிற்பதற்கு, சில ஊழல் புரையோடிய அரசியல்வாதிகளின் சுயநலம் தான் காரணம் என்பதை தற்போது நீதிமன்றங்களில் நடந்துவரும் பல்வேறு பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகள் அம்பலப்படுத்துகின்றன. 

கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பது, அந்த பணத்தை, சாமர்த்தியமாக சட்ட விரோதமான முறையில் கையாள்வது என பல்லாண்டுகளாக பணமோசடியும் ஊழலும் நடந்துள்ளன. நிதி சார்ந்த இந்த குற்றங்கள் மற்றும் ஊழல்களுக்கு பின்னால் இருக்கும் மாஸ்டர் மைண்ட், இந்தியாவின் சீனியர் அரசியல் தலைகள். 

இந்தியாவில் ஊழல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட உயரிய ஃப்ரொஃபைல் கொண்ட பிரபலம் என்றால், அது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான். சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு அமைப்புகளும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தன.

சுமார் 10 ஆண்டுகள் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை ஊழல் வழக்குகள் வேட்டை நாய்களைப்போல விடாது விரட்டுகின்றன. பல ஆண்டுகளாகவே சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜகவின் 2014-2019 ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் கைது செய்யப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மக்கள் பார்வையில் எதிரெதிர் கட்சிகளாக திகழும் பாஜக மற்றும் காங்கிரஸின் தலைவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர்கள். அப்படிப்பட்ட பழைய நண்பர்கள் தான், முன்னாள் நிதியமைச்சர்கள் சிதம்பரமும் காலம் சென்ற அருண் ஜேட்லியும்.

2014-2019 தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, 2019ல் பாஜக வென்று ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர்ந்தபோது, உடல்நிலை சரியில்லாததால் அருண் ஜேட்லிக்கு நிதித்துறை வழங்கப்படவில்லை. அதன்பின்னர் தான் சிதம்பரத்திற்கு சிக்கல் ஆரம்பமானது. 2019 ஆகஸ்ட் 21ம் தேதி சிதம்பரம் கைதாகிறார்.. ஆகஸ்ட் 24ம் தேதி அருண் ஜேட்லி இறக்கிறார்.

ப.சிதம்பரம் கைதானதற்கு பின், அவரது ஊழல் நெட்வொர்க் இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

சிதம்பரத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டில், ஊழல் செய்து சம்பாதித்த பணம் மற்றும் அந்த பணத்தை கையாண்ட விதம் என மொத்த 4 கூறுகள் உள்ளன. 

1. ஊழல் செய்து பணம் ஈட்டியது 

2. ஊழலில் குவித்த பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பியது 

3. வெளிநாட்டில் அந்த பணத்தை பயன்படுத்திய முறை

4. அந்த பணத்தை திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவந்தது

இந்த நான்கு படிநிலைகள் தான், ஊழலில் சம்பாதித்த கருப்பு பணத்தை சிதம்பரமும் அவரது ஊழல் நெட்வொர்க்கும் கையாண்ட முறைகள். இந்த பிராசஸில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வங்கிகள், நிதிச்சேவை வழங்குநர்கள், பண மோசடி செய்பவர்கள் என பலரும் சம்மந்தப்பட்டிருப்பார்கள். மேற்கண்ட அனைத்து விதங்களையும் சிதம்பரம் பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு இல்லை. 

ஊழல் செய்து சம்பாதிப்பது எப்படி மற்றும் அந்த பணத்தை நிர்வகிக்கும் சட்டவிரோத முறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

1. ஊழல் செய்து சம்பாதித்தது எப்படி?

ப.சிதம்பரமும் அவரது ஊழல் நெட்வொர்க்கும், தங்களது பதவிகளை துஷ்பிரயோகம் செய்து அரசின் கொள்கைகள், கட்டுப்பாடுகள் என அனைத்தையுமே பணம் ஈட்டுவதற்கான வழிகளாக பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. தனது பதவியை பயன்படுத்தி, தனக்கு வேண்டப்பட்டவர்களின் தொழிலை மேம்படுத்தி கொள்ள உதவிய சிதம்பரம், அவர்களுக்கு போட்டியாக திகழ்ந்த நிறுவனங்களை காலி செய்யும் பணிகளையும் செய்திருக்கிறார்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு - சிதம்பரமும் அவரது ஊழல் பார்ட்னர்களும் இணைந்து நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(NSE)-ஐ முன்னிலைப்படுத்தி ஊக்கப்படுத்தியதுடன், அதை முதன்மை எக்ஸ்சேஞ்ச் நிறுவனமாக நீடிக்க செய்தனர். அதற்கு போட்டியாக இருந்த மற்ற எக்ஸ்சேஞ்சுகளை காலி செய்தனர். குறிப்பாக ஜிக்னேஷ் ஷாவால் நடத்தப்பட்டு வெற்றிகரமாக திகழ்ந்த எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் காலி செய்யப்பட்டது. தனது ஆதரவில் செயல்படும் நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் நிறுவனங்களை, ரெய்டு, சொத்து பறிமுதல், கைது என தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து சிதம்பரம் அச்சுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

என்.எஸ்.இ-க்கு போட்டியாக திகழ்ந்த எக்ஸ்சேஞ்சுகளை அடித்து காலி செய்ததுடன், என்.எஸ்.இ-யின் வளர்ச்சிக்காகவும் அதன் லாபத்தை பெருக்குவதற்காகவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மோசடியில் ஈடுபடும்போது, எல்லா நேரத்திலும் திறமையாக, மாட்டிக்கொள்ளாமல் செயல்பட முடியாது. அதனால், இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது, பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, பங்குகள் எல்லாம் மீட்கப்பட்டு விற்கப்படுகின்றன என்றும் இந்திய ரூபாயின் மதிப்பை கையாள்வதற்காக, பல சூட்சம விளையாட்டுகளை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம் கைதானார். ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்(FIPB) அனுமதியளித்ததில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஐ.என்.எக்ஸ் மீடியா ரூ.300 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீட்டை பெற்றது. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்டதைவிட இந்த முதலீடு அதிகமானது. ஐ.என்.எக்ஸ் மீடியாவிடமிருந்து மிகப்பெரிய தொகை கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட பின்னர்தான், முதலீட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. (மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கிவந்த அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் 2017ல் கலைக்கப்பட்டது)

2. ஊழல் செய்து குவித்த பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியது எப்படி?

பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஹவாலா நெட்வொர்க். இங்கிருந்து நேரடியாக பணமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்லப்படமாட்டாது. ஹவாலா என்பது பெரிய நெட்வொர்க். உலகம் முழுதும் அந்த நெட்வொர்க்கை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 

ஹவாலா நெட்வொர்க் செயல்படும் முறை:

டெல்லியிலிருந்து ஒருவர் லண்டனிற்கு ஒரு பத்து கோடியை அனுப்ப நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். டெல்லியில் இருக்கும் ஹவாலா நெட்வொர்க் நபரிடம் அந்த தொகையை கொடுத்தால், அந்த ஹவாலா நபர், லண்டனில் இருக்கும் ஹவாலா நபரிடம், பணம் சேர வேண்டிய நபரின் விவரத்தை கொடுத்துவிடுவார். லண்டன் ஹவாலா நபர், அந்த பத்து கோடியை சம்மந்தப்பட்ட நபரிடம் சேர்த்துவிடுவார். இந்த பரிவர்த்தனையில் வரி, கஸ்டம்ஸ் என எந்த சிக்கலும் இல்லை. மொத்த பணமும் வெளிநாட்டிற்கு பாதுகாப்பாக சென்றுவிடும்.

நிதி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள், தீவிரவாத அமைப்புகள், போதைப்பொருள் டீலர்கள், சட்டவிரோதமாக ஆயுதம் விற்பவர்கள், கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் ஹவாலா மிகப்பிரபலம். ஹவாலா நெட்வொர்க்கில் இருப்பவர்கள் பெரிய கிரிமினல்கள். ஹவாலா மூலம் அரசியல்வாதிகள் பணப்பரிவர்த்தனை செய்வதால், அவர்களும் அந்த சிஸ்டத்தில் இணைந்துவிடுகிறார்கள். எனவே ஹவாலா முறையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யும் ஊழல் அரசியல்வாதிகள், தங்களது பணத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக ஹவாலாவை நடத்தும் கிரிமினல்களின் மிரட்டல்களுக்கு கட்டுப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவும் திகழ்கிறார்கள்.

கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரும் ஹவாலா பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கி சிதம்பரத்துடன் சிறையில் இருந்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிறைக்கு சென்று அவர்கள் இருவரையும் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

3. வெளிநாடுகளில் இந்த கருப்பு பணத்தை பயன்படுத்தியது எப்படி?

உலகின் பல்வேறு நாடுகளில் சிதம்பரத்தின் உறவினர்கள் பெயரில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை கேட்க, இந்திய அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதனால்தான் அந்த வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் குறித்த தெளிவான விவரம் இதுவரை கிடைக்கவில்லை.

4. வெளிநாட்டிற்கு கடத்திய பணத்தை திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவருவது எப்படி?

வெளிநாட்டிலிருந்து அந்த பணத்தை திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில், மிகச்சிறந்த முறை என்றால், அது Participatory Notes(P-Notes) என்ற முறை. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பி-நோட்ஸ் முறை மிகவும் பிரபலம். கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற சில நிறுவனங்கள் இந்த பி-நோட்ஸ் முறையை கையாண்டன. பி-நோட்ஸ் முறையில், இங்கிருக்கும் சில புரோக்கர்கள் மூலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவில் என்.எஸ்.இ போன்ற நிறுவனங்களில் பங்குகளை வாங்குவார்கள். அப்படி பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களின்(நிறுவனம் அல்ல தனிநபர்) விவரங்கள் பின் தொடரப்படவில்லை. அவர்களின் அடையாளம் தெரியாமல் சிதம்பரம் பார்த்துகொண்டார்.

எனவே, இந்தியாவில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை, ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி, பின் அங்கிருந்து, பி-நோட்ஸ் மூலமாக இந்திய நிறுவனங்களில் பங்குகளை வாங்கிவிட்டார்கள். எனவே பணமோசடி எந்த சிக்கலும் இல்லாமல் செய்யப்பட்டதுடன், அந்த பணம் வெள்ளையாகவும் மாறிவிட்டது. இந்தியாவில் வாங்கிய பங்குகளை லாபமாக்குவதற்கான வழிகளையும் பின்பற்றி, அதன்மூலமும் லாபம் பார்த்துள்ளனர். பணத்தை எந்தெந்த வழியில்(குறுக்கு) எல்லாம் சம்பாதிக்கலாமோ அனைத்து வழிகளிலும் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சிதம்பரத்தின் ஊழலுக்கு ஒத்துழைத்த ஊழல் தொழிலதிபர்களும் வளர்ந்த அதேவேளையில், நேர்மையான தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரமும் சிதைந்தது. ஜிக்னேஷ் ஷாவின் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என டாடா ரிசர்ச் மதிப்பிட்டு கூறியது. ஊழல் கரைபுரண்டோடும் இந்த சிஸ்டத்தில், கடும் போட்டியாளராக திகழ்ந்த ஒரே காரணத்தால் ஜிக்னேஷ் ஷா ஓரங்கட்டப்பட்டார். அதேபோல ஏராளமான திறன் வாய்ந்த தொழிலதிபர்களும், அவர்களது தொழில்களும் முடக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் அவரை சுற்றியிருந்த சிலரின் சுயநலத்திற்காக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியே தடைபட்டுவிட்டது.

இந்தியா, ஊழலிலிருந்து விடுபட்டுவிட்டால், பரந்த பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படுவதுடன், எல்லை கடந்தும் பொருளாதார நிலைத்தன்மையுடன் இந்தியா விளங்கும். ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஊடகங்கள் உதவவேண்டும். கருப்பு பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ளவர்களின் பட்டியலை வெளிநாட்டு அரசாங்கங்கள் வெளியிட்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுக்க முன்வரவேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios