தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை திமுக ஒதுக்காது என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார். பொங்கல் திருநாளுக்கு தமிழகம் வந்த ராகுல் காந்திக்கு மதுரை மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே ஜூன் 23-ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   
23-ம் தேதி மேற்கு மண்டலத்துக்கு வரும் ராகுல் காந்தி பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டெல்லியிலிருந்து 23-ம் தேதி கோயமுத்தூருக்கு வரும் ராகுல் காந்தி, அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். பின்னர் சிறு, குறு தொழில் முனைவோரையும் சந்தித்து பேச ராகுல் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.