பள்ளிக்குழந்தைகள் ஆல் பாஸ் போட வேண்டும் என்று கேட்டால், நான் ஆல் பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பள்ளிக்குழந்தைகள் ஆல் பாஸ் போட வேண்டும் என்று கேட்டால், நான் ஆல் பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்டாயம் தேர்வுதான் தன் நிலைப்பாடு என்றும், மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருபுறம் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் மறுபுறம் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைகளுக்கு ஏராளமான திறமைகள் உள்ளது, அத்திறமைகளை கண்டறியும் பணி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ளது. எப்போதும் பெற்றோர்கள் குழந்தைகளை எவருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 5ஆம் தேதி பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் என்பது கட்டாயமில்லை. விருப்பமுள்ளவர்கள் அணிந்து கொள்ளலாம், பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதல் ஆகும். தற்போது புதிய வழிகாட்டுதலில் தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முக கவசம் அணிய வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

திமுக அரசு அமைந்த பிறகு முறையாக தேர்வுகள் நடத்தி வருகிறோம், கத்திரி வெயிலுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிறைய பள்ளிக் குழந்தைகள் ஆல் பாஸ் வேண்டும் என்று கேட்கும் போதுகூட நான் ஆல் பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன். கட்டாயம் தேர்வு என்பது தான் எங்களது நிலைப்பாடு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஒற்றை ஆசிரியர் பள்ளியை தமிழகத்தில் மூட அரசு விரும்பவில்லை எனவே ஒரு மாணவர் படித்தாலும் பள்ளி இயங்கும் என்றார். வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறை விடுவது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
