Marxist Party rally

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ம் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினர். 200-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது, ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரே விசாரணைக்கு உத்தரவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரே, ஓய்வு பெற்ற ஐ.ஏஎஸ். சந்தானம் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். இது ஜனநாயக ரீதியாக சரியானது அல்ல. தமிழகத்தில் உயர்கல்வி சீரழிட்நது வருகிறது. அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு சர்ச்சைக்கு ஆளான ஒருவரை துணை வேந்தராக அவர் நியமனம் செய்துள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு, தகுதிக்குரிய பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தாலும், அவர்களைப் புறக்கணித்து விட்டு, வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். ஒட்டுமொத்தமாக துணை வேந்தரை நியமித்து ஊழல் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி கையூட்டு வாங்கியுள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்டவரை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
விசாரணை என்பது குற்றம் செய்பவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அல்ல. குற்றம் சாட்டபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். ஆளுநரின் வரம்புமீறிய செயலால், மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதன் சுயாட்சி பாதிக்கப்படுகிறது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்த மோசமான பாலியல் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றபோது, குறிப்பிட்ட இடத்திற்கு மேல் அவர்களை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பேரணியில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, சாலையில் அமர்ந்திருந்தவர்களை, போலீசார் கைது செய்தனர்.