கன்னியாகுமரி மாவட்டம் செட்டிசார்விளை, கன்னிமார்கோணம் பகுதியை சேர்ந்தவர் சகாயஆன்றணி (46). இவர் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 7 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்கு செல்லும் போது அந்த பகுதியில் மறைந்திருந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் இரும்பு கம்பியால் அவரை தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை எப்படி கைது செய்தனர் என்பதை போலீசார் ஒருவர் பேசுகையில்.. "குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  சுவாமியார்மடம், காட்டாத்துறை, புல்லுவிளை போன்ற இடங்களில் ரகசியமாக இயங்கும் சூதாட்ட கும்பல்கள் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாத நிலையில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளை சைபர் கிரைம் மற்றும் திருநெல்வேலியிலிருந்து வந்த டவர்டெம் பிரிவினர் தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு மேற்கொண்டதில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.

இதனையடுத்து சூதாட்ட கும்பலை பல நாட்களாக கண்காணித்து வந்தோம்.. இதில் சூதாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தருபவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுத்து வரும் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ராஜேஷ், புல்விளை பகுதியை சேர்ந்த சுனில் நாயகம், வியன்னூர் பகுதியை சேர்ந்த வினுகுமார் என்ற பரளியாண்டி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினோம்.

அப்போது எங்களுக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலை வைத்து அவர்களை பின்தொடர்ந்து கண்காணித்தோம்.சூதாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பவர்கள் மீது ஒரு கும்பல் மறைந்து தாக்குதல் நடத்துவது தெரியவந்தது.சூதாட்ட இடத்தை அடிக்கடி மாற்றி சூதாட்டம் நடத்தும் போதும் போலீசார் கண்டுபிடித்து கடும் நெருக்கடி தருவதால் சூதாட்டம் நடத்த முடியாமல் லட்சகணக்கில் இழப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு தகவல் கொடுப்பது கவுன்சிலர் சகாயஆன்றணிதான் என சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தாக்க முடிவு செய்து சூதாட்ட கும்பலை சேர்ந்த ஆட்களை தயார் செய்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். இது சம்மந்தமாக திருவட்டார் போலீசார் 3 பேரையும் கைது செய்ததோடு, இதில் தொடர்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.