ஆணாதிக்கம் பொங்கி வழியும் அரசியல் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு வென்றதோடு, அத்தனை ஆண் நிர்வாகிகளையும் தன் சுட்டு விரலுக்கு கீழே ச்சும்மா உட்கார வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பின் அக்கட்சியின் தன்மானத்தை அக்கழகத்தினரே போட்டி போட்டுக் கொண்டு துயிலுரிந்து கொண்டிருக்கின்றனர். 

அதில் இப்போது வெடித்திருக்கும் விமர்சனம் ஆக மோசமானது...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன். 2016 தேர்தல் முடிந்து இத்தனை காலமாக வெளியேவே தெரியாமலிருந்தார் இவர். காரணம் அந்தளவுக்கு தொகுதிக்கு அதிரடியாக எதையும் செய்யவில்லையாம். ஆனால் கடந்த வாரம் திடீரென ‘டாக் ஆப் தி டவுன்’ ஆகிப்போனார் மனிதர். அதுவும் ஒரு சாதனையால் கிடைத்த பெயரென்றாலும் கூட பரவாயில்லை, இவர்  பெயர் அடிபட்டதோ வில்லங்கமான ஒரு விவகாரத்தில். 

அதாவது 42 வயதாகும் ஈஸ்வரன் இப்போதுதான் திருமணத்து தயாராகி, பெண்ணும் பார்த்து நாளை (செப்டம்பர் 12) பண்ணாரியில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார். இதில் தப்பில்லை வாழ்த்த வேண்டிய விஷயம்தான். ஆனால் அவர் கட்டிக்க பார்த்திருந்த பொண்ணோ அவரை விட 19 வயது சிறியவர். ’இவ்வளவு வயதான மாப்பிள்ளை வேண்டாம்!’ என்று போராடிப் பார்த்த பெண்,  பெற்றோரின் டார்ச்சரால் நிச்சயத்துக்கு சம்மதித்தார். ஆனால் கடந்த வாரம் திடீரென வீட்டை விட்டு அவர் காணாமல் போக, விஷயம் போலீஸுக்குப் போக, அதன் பின் உலகத்துக்கே தெரிஞ்சு போனது இந்த விவகாரம். 

’இவ்வளவு சின்ன பொண்ணையா எம்.எல்.ஏ. கல்யாணம் முடிக்க பார்த்தார்? அந்தாளுக்கு மனசாட்சி வேண்டாமாய்யா? கிட்டத்தட்ட தன்னோட மகள் வயசுல இருக்குற பொண்ணை போயி மனைவியாக்க நினைச்சிருக்கிறாரே! சமுதாயத்துக்கு உதாரணமா இருக்க வேண்டிய ஒரு மனுஷனே இப்படியொரு விபரீத முடிவை எடுக்கலாமா?’ என்றெல்லாம் தமிகமெங்கும் இருந்தும் விமர்சனக் குரல்கள் வெடித்தன. 

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், தன்னை விட மிக சிறிய பெண்ணுடன் ஈஸ்வரன் செய்யவிருந்த திருமணத்துக்கு தமிழகத்தின் இரண்டு முதல்வர்களும் தலைமை ஏற்று நடத்த இருந்ததுதான். ”தன் கட்சி எம்.எல்.ஏ. இப்படியொரு காரியத்தை பண்ண இருக்கார். இதுக்கு தலைமை தாங்க வேற சம்மதிச்சிருக்கிறாங்க ரெண்டு முதல்வர்களும். இதெல்லாம் அசிங்கம்யா. ’பொண்ணோட வயசு இவ்வளவு குறைவுன்னு எங்களுக்கு தெரியாது’ அப்படின்னெல்லாம் முதல்வர்கள் எஸ்கேப் ஆக முடியாது. காரணம், உளவுத்துறையை கையில் வெச்சிருக்கிற முதல்வர்கள் இதை கூட தெரிஞ்சுக்கலேன்னா அப்புறம் மாநிலத்துல நடக்கு எந்த அசம்பாவிதத்தை முன்கூட்டியே உணர்ந்து தடுக்க முடியும்?”  என்று  வறுத்தெடுத்துவிட்டனர் தி.மு.க.வினர். 

இச்சூழலில், தன்னை வெறுத்து ஒரு பெண் சென்றுவிட்டதால், கல்யாணத்துக்கு நாள் குறித்த அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு பெண்ணை மணக்க இருக்கிறார் எம்.எல்.ஏ. சத்தியமங்கலத்தில் உடனடியாக வேறு ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்துவிட்டனர். அந்தப் பெண்ணுடன் நாளை அவருக்கு திருமணம். இந்தப் பெண்ணின் வயதும் ஒன்றும் எம்.எல்.ஏ. வயதுக்கு நெருங்கியதில்லை! என்கிறார்கள். 

இந்நிலையில், நாளை நடக்க இருக்கும் திருமணத்துக்கு முதல்வர்கள் வருவார்களா? என்பது புதிராக இருக்கிறது. முதல்வர் எடப்பாடியார் இன்று சேலத்தில்தான்  ப்ரோக்ராமில் இருக்கிறார். இன்று இரவில் கோயமுத்தூர் வந்து சென்னை சென்றுவிடுவாரா அல்லது ஈஸ்வரன் திருமணத்துக்கு சென்று அட்சதை தூவுவாரா என தெரியவில்லை! என்கின்றனர் அக்கட்சியினர். 

எது எப்படியோ, சுமார் இருபது வயது குறைந்த பெண்ணை தனக்காக எம்.எல்.ஏ. நிச்சயித்ததை விமர்சிக்கும் நபர்கள் ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியான முயற்சியெல்லாம் நடக்குமா? முயன்றிருந்தால் எம்.எல்.ஏ. பதவியே பறிபோயிருக்கும். அந்தம்மா கட்டிக்காத்த கழக கம்பீரத்தை காற்றில் பறக்க விடுகிறார்கள்.’ என்று விமர்சனங்கள் ஓயாமல் வந்து கொண்டே இருக்கின்றன.