marksisit party support to staline

ஆதாய நோக்கமின்றி அடுத்தவனின் பிரச்னைக்காக குரல் கொடுப்பவன் எவனுமே காம்ரேட்தான். ஆனால் தமிழக கம்யூனிஸ்டுகள் சட்டசபை ஆதாயத்துக்காக புது குதிரை சவாரிக்கு தயாராகிவிட்டார்கள். அந்த குதிரையின் பெயர் தி.மு.க.

சட்டசபையில் பூஜ்யமாகி இருக்கிறது கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை. கூட்டணி கட்சிகளின் புண்ணியத்தில் கிடைத்த ராஜ்யசபாவை தவிர லோக்சபாவிலும் ஒரு எம்.பி. கூட இல்லை. கடந்த தேர்தலில் தாங்களே உருவாக்கிய ‘மக்கள் நல கூட்டணி குதிரை’ மண் குதிரையாகிப் போய்விட்டது.

 ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வானது பா.ஜ.க.வின் கைப்பொம்மையாகி நிற்பதாக தேசமே விமர்சிக்கிறது. இந்நிலையில் கம்யூனிஸ்டுகளின் கையிலிருக்கும் ஒரேயொரு வாய்ப்பு தி.மு.க. கூட்டணி மட்டுமே. எனவே ‘வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டங்கள்’ எனும் பெயரில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிரான ஆற்றில் ம.ந.கூ. மண் குதிரையை கரைத்துவிட்டு தி.மு.க.வை நோக்கி கரையேறி இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின் திட்டமிடும் அத்தனை வித ‘அனைத்து கட்சி கூட்டங்களிலும்’ எந்த வித முரண்பாடும் கொள்ளாமல் கலந்து கொள்கிறார்கள் சி.பி.ஐ.யும், சி.பி.எம்.மும். கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக துவங்கப்பட்ட கோவை மக்கள் மேடை நிகழ்வில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தவிர மற்ற அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து நின்றார்கள்.

மார்க்சிஸ் கம்யூனிஸ்டின் முயற்சியால் துவக்கப்பட்ட இந்த மக்கள் மேடையில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட கனிமொழி பிரதானப்படுத்தப்பட்டார்.

அவரோடு பிரகாஷ்காரத்தும், சுப்பராயனும் கலந்து நின்று கைகோர்த்து ஒற்றுமையை காட்டினர். 

இப்போது கொட்டிவாக்கத்தில் நடந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டனர் இரு கம்யூனிஸ்டுகளும். மிசா காலத்தில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க கருணாநிதி செய்த முயற்சிகளை சிலாகித்துப் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி “கலைஞரின் நெஞ்சுரத்தொடு சமூக நீதி காக்க, மாநில உரிமைகளைக் காக்க ஜனநாயக கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறி கூட்டணிக்கு ரெடி என்று கோடிட்டுள்ளார். 

சி.பி.ஐ. மாநில செயலாளரான முத்தரசன் ‘போர் தொடங்கும் முன் சங்கொலி எழுப்பப்படும். அந்த சங்கொலியை எழுப்ப இங்கு சங்கொலியும் (வைகோ) வந்துவிட்டது.

முரசொலி படிக்கவில்லை என்றால் அவன் அரசியல்வாதியே அல்ல. அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் முரசொலி வாசித்திருந்தார்கள் என்றால் அங்கே ஒரு நல்ல தலைமை உருவாகியிருக்கும்.” என்று சிலிர்த்துப் பேசி கூட்டணிக்கு அடித்தளமிட்டுப் போனார்.

இவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று விருப்பமும் தெரிவித்திருக்கிறார்.ஆக அறிவாலயத்தில் இனி சிவப்பு துண்டுகளை வெகுவாக காணலாம்!