என்னை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளும் மோசமானவைதான். இரண்டுமே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கிற கூட்டம் என்றாலும் முதலில் அழித்தொழிக்கப்பட வேண்டியது திமுகதான்.
ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக தடாலடியாக அறிவித்திருக்கிறார் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ்.
சமூக ஊடங்களில் மாரிதாஸ் மிகவும் பிரபலம். பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து சமூக ஊடகங்களின் வழியாகவே பிரசாரம் செய்துவருகிறார். அண்மையில் காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து அவர் அடுத்தடுத்து போட்ட வீடியோ பதிவுகள் திமுகவை அதிர்ச்சி அடையவைத்தது. திமுக எம்.பி.யே நேரில் சென்று போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக மாஸ் காட்டிவருகிறார்.

மாரிதாஸின் பதிவுகள் பாஜகவினர் வலது சாரிகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ, அதே அளவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் எரிச்சலடைய செய்துவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு 'காமதேனு’ வார இதழில் பேட்டி அளித்திருக்கும் மாரிதாஸ், பல்வேறு விஷயங்களைக் குறித்து பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்களை விமர்சிக்கும் நீங்கள், அதிமுகவை மட்டும் விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு மாரிதாஸ் பதில் அளித்திருக்கிறார்.

