Asianet News TamilAsianet News Tamil

சிபிஐ.,யை இனி யார் மதிப்பார்கள்..? பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோருகின்றனர் மாறன் சகோதரர்கள்...!

maran brothers file a petition to relieve them from bsnl case
maran brothers file a petition to relieve them from bsnl case
Author
First Published Dec 22, 2017, 7:32 PM IST


2ஜி வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில், பிசுபிசுத்துப் போன நிலையில், பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் என்ன ஆகிவிடப் போகிறது என்ற எண்ணம் இப்போது பலருக்கு எழுந்திருக்கிறது. அதை விட சிபிஐ நீதிமன்றத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் மரியாதையும் அதளபாதாளத்துக்குப் போயுள்ளது. 

பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் அதிவேக அலைக்கற்றை இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில், நேரில் ஆஜராகாமல் இன்றும் மாறன் சகோதரர்கள் தவிர்த்ததால், மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. 

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான  சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதிவேக கண்ணாடியிழை அலைக்கற்றை இணைப்புகளை  முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடுத்திருந்தார்.  

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, தயாநிதி மாறன் 2007 இல் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2016 டிசம்பரில் தில்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கின் கடந்த ஜூலை  மாதம் குற்றப் பத்திரிகை நகல் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று 14ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகவில்லை. சன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், தயாநிதி மாறன் தனிச் செயலாளர் கவுதமன், எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அப்போது, மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இருந்து தங்களை (மாறன் சகோதரர்களை) விடுவிக்க வேண்டும் எனக் கோரினார். அதற்கு சிபிஐ  வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.  தங்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் தேவை எனக் கோரினார். இதை அடுத்து நீதிபதி விசாரணையை வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios