சில நாட்கள் முன்பு வரைக்கும் தமிழகத்தை சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் மற்றும் போராளிகளுக்கு ’ஈழம், நெடுவாசல், நீட், ஹைட்ரோ கார்பன்!’ என்று போராடவும், கொதிக்கவும், குமுறவும் நிறைய பிரச்னைகள் இருந்தன. அவற்றுக்கு எதிராக அடிவயிறு அதிர குரல் கொடுப்பதும், களமாடுவதுமாய் அவர்களின் நாட்கள் கரைந்தன. 

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த உணர்வாளர்களின் ஒரே குறி ’நடிகர் ரஜினிகாந்த்’ மட்டுமே. அவர் அரசியலுக்கும் வரக்கூடாது, ஆளவும் வரக்கூடாது! எனும் டார்கெட்டை வைத்துக் கொண்டு, டக்கராய் அதை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் சரி! அல்லது வாய்ப்பை இவர்களே உருவாக்கிக் கொண்ட சூப்பர் ஸ்டாரை சுளுக்கெடுக்கும் வகையில் போட்டுத் தாக்குகிறார்கள்.


 
இவர்களை ரஜினி ரசிகர்களும் மிக தெளிவாக அடையாளம் கண்டு வைத்து, அவர்களை பொது வெளி! என்று இப்போது அடையாளப்படுத்தப்படும் சோஷியல் மீடியாக்களில் வெச்சு வெளுக்கிறார்கள். அந்த வகையில் ரஜினிக்கு எதிரான மனிதர்களாக கிட்டத்தட்ட நூறு பேரை (அட அவ்வளவுதானா? குறைவா இருக்குதே கண்ணா எண்ணிக்கை!) லிஸ்ட் அவுட் செய்து, அடையாளப்படுத்தியுள்ளனர். 

அந்த லிஸ்ட்டின் முக்கிய நபர்கள் இப்படியாக இருக்கிறார்கள்....ஸ்டாலின், உதயநிதி, வைகோ, கார்த்தி சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, பாரதிராஜா, சீமான், அமீர், கரு.பழனியப்பன், திருமுருகன் காந்தி, நடிகர் சித்தார்த், ஆ.ராசா, சிவ சேனாதிபதி, பியூஸ் மானுஸ், தா.பாண்டியன், டாக்டர் ஷாலினி, வன்னியரசு, நடிகர் சத்தியராஜ் என்று நீள்கிறது அந்த லிஸ்ட். 

இந்த நூறு பேரில் இயக்குநர், நடிகர் கவுதமனும் அடக்கம். இது பற்றி  கண்கள் சிவக்க கருத்து சொல்லியிருக்கும் அவர்....”ரஜினி ரசிகர்கள் என்றால் எந்த வயது கொண்டவர்கள் இப்படி பதிவு செய்துள்ளனர் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அவரது ரசிகர்கள் அறுபது வயதைத் தாண்டிவிட்டனர். எதிரிகளின் பட்டியலைத் தயார் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுமளவுக்கு அவர்கள் சுறுசுறுப்பானவர்களா? என்பது கேள்வி. 

மேலும் இதை செய்வது ரசிகர்கள்தானா அல்லது ரஜினிக்கு வேண்டப்பட்ட ஏதாவது மதவெறிக்கூட்டம் இப்படி செய்கிறதா? என்று பார்க்க வேண்டும். 

ரஜினியை அவரது ரசிகர்கள் கொண்டாடுவதற்கு என்ன தேவை, அவசியம், காரணம் இருக்கிறது? தனது ரசிகர்கள் வாழவேண்டும் என்பதற்காக இதுவரை எந்தப்படத்திலும் ரஜினி நல்ல மெசேஜ் எதுவும் சொன்னதேயில்லை. ரஜினியால் தமிழ் சமூகம் குடித்து, குடல் வெந்து கூட்டம் கூட்டமாக செத்து வருகிறது. ரஜினி ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறார் என்பதை அவரது ரசிகர்கள் பின்பற்றி நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். ஒரேயொரு ரசிகனாவது ‘நான் ரஜினி படத்தை பார்த்து திருந்தினேன்’ என்று சொல்ல முடியுமா?

தமிழ் இனத்துக்கு எதுவுமே செய்யாதவர் ரஜினி. என்னை ரஜினியின் எதிரிகள் பட்டியலில் சேர்த்துள்ள அவரது வயதான ரசிகர்களைப் பார்த்துச் சொல்கிறேன், உங்கள் கிருஷ்ணரே ரஜினியை பார்த்துக் கொள்வார்.” என்று ஆவேசம் பொங்கியிருக்கிறார். 
ஆஹாங்!