காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகள் வெளிப்படையாக கருத்து கூறாததற்கு இந்தியாவின் அழுத்தம்தான் காரணம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரம் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று எனக் கூறி அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விலக்கிக் கொண்ட நிலையில், பாகிஸ்தான்  வெளியுறவு துறை அமைச்சர் தற்போது இவ்வாறு ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்து வருகிறது. முதலில் கடந்த ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 ஆவது சட்டப்பிரிவு  நீக்கப்பட்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இது பாகிஸ்தான் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது என கொந்தளித்தது,  370 வது சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தது.

இந்தியா அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத காரணத்தால் சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா மன்றம் வரை கொண்டு சென்றது, அதில் சர்வதேச  நாடுகள் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது, ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையேயான விவகாரம் அதுமட்டுமின்றி, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், இதில் மூன்றாவது நாடுகள் தலையிடக்கூடாது எனவும் இந்தியா எச்சரித்தது. இதையடுத்து அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கருத்து கூறுவதை நிறுத்திக் கொண்டன. ஆனாலும் காஷ்மீர் விவகாரத்தில்  தொடர்ச்சியாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்து வருவதுடன், இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாகவே சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய எல்லையில் இரு நாடுகளும் அத்துமீறி வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் செய்தனர். அங்கு ராணுவ உயரதிகாரிகள் அவர்களுக்கு காஷ்மீர் விவகாரத்தையும் அதன் நிலைமையையும் விளக்கி கூறினர். அதேபோல் வெளியுறவு அமைச்சர் முகமது குரோஷி மற்றும் பாதுகாப்பு மந்திரி பர்வேஷ் கட்டக் ஆகியோர் திங்கட்கிழமை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு பயணம் செய்தனர், அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்த அவர்கள் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய முகம்மது குரோஷி, பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையாக பேச முடியவில்லை, அதற்கு காரணம் இந்தியாவின் அழுத்தம் தான் என்பதை பாகிஸ்தான் நன்கு புரிந்து வைத்துள்ளது. காஷ்மீருக்காக பாகிஸ்தான் குரல் எழுப்பிய விதத்தில் எப்போதும் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுடன் பொருளாதார உறவு வைத்துள்ளன, இதை யாரும் யாரிடமும் மறைக்க  முடியாது, அந்நாடுகள்  காஷ்மீர் பற்றி வெளிப்படையாக பேசாததற்கு இதுவே காரணம். மொத்தத்தில் இது இந்தியாவின்  ஒருவித நேரடி பொருளாதார அழுத்தமே ஆகும்.  அதற்கு இன்னும் வேறு காரணங்களும் உள்ளன. அந்நாடுகள் இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன. இருப்பினும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலை இதுவல்ல, இதுவரைக்கும் இந்த பிரச்சனையை முழு பலத்துடன் எழுப்பி இருக்கிறோம், எதிர்காலத்திலும் இதையே செய்வோம்.  மேலும்,  இந்திய தரப்பில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதால், எல்லையில் வசிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிலர் கொல்லப்படுகிறார்கள். எனவே இதை சமாளிக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது, அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் இது குறித்து விவாதித்துள்ளார். இந்த விஷயத்தில் விரைவில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கான செயல் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா உள்ளிட்ட பிற மன்றங்களில் தொடர்ந்து எடுப்பும் என கூறியுள்ளார்.