கர்நாடகாவில் அரசுத்துறையில் லஞ்ச லாவண்யம் அதிகம் என்பார்கள். அதிலும் கர்நாடக சிறைத்துறையில் கைதிகளுக்காக உறவினர் கொண்டு வரும் ஆரஞ்சு பழத்தில் ஆரம்பித்து, பணக்கார கைதிகளுக்காக விதிகளை தளர்த்துவதன் மூலம் கிடைக்கும் ஆப்பிள் போன் வரை எல்லாமே இலவசமாய் கிடைக்கும்! என்பார்கள்.

சாதாரண சிறை காவலர்களுக்கே இவ்வளவு சம்பாத்தியமென்றால் டி.ஐ.ஜி. லெவல் அதிகாரிகள் எந்தளவு சம்பாதிக்கலாம்! என்று யோசியுங்கள்.

அதிலும் சசிகலா போன்ற மிகப்பெரிய செல்வந்த கைதிகள் வந்து சேர்ந்தால், அவர்களின் வசதிக்காக விதிகளை வளைப்பதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம்! என்பதை யோசிக்கவே முடியாது. ஆனால் ஒரு வேளை சிறை அதிகாரி நேர்மையானவராக இருந்துவிட்டால்?!....

பரப்பன அக்ரஹாரா சிறையில்  இப்படித்தான் சசிக்கு வழங்கப்பட்ட மெகா வசதிகளை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு வேட்டு வெடித்தார் அச்சிறையின் டி.ஐ.ஜி.யாக இருந்தா ரூபா. சசியின் வசதிக்காக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்யநாராயணராவ்-க்கு ரெண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டதாக ரூபா கிளப்பிய பூகம்பம் தேசிய அளவில் கர்நாடக சிறைத்துறையை தலைகுனிய வைத்தது.

இந்த பரபரப்புகளை தொடர்ந்து ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பு, ரூபா வேறு துறைக்கு ட்ரான்ஸ்பர், சத்யநாராயணராவை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது! என்று விறுவிறுவென காட்சிகள் அரங்கேறின.

கடந்த சில மாதங்களாக உறங்கிக் கிடந்த இந்த விவகாரம் இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்திருக்கிறது. இதற்கு காரணம், மாஜி டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரணையை துவக்கிட, ‘முதல்வர் சித்தராமையா சொன்னதால்தான் நான் சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை போன்றவற்றை கொடுக்க உத்தரவிட்டேன்.

எனவே என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.’ என்று அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் மீது ராவ் கிளப்பியிருக்கும் இந்த புகாரை தொட்டு செம்ம ராவடியில் ஈடுபட்டிருக்கிறது கர்நாடக பி.ஜே.பி.

இந்நிலையில் அன்று தான் சொன்ன குற்றச்சாட்டுகளை கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார் ராவ்! என்று செம்ம குஷியிலிருக்கிறார் நேர்மை பெண் அதிகாரியான ரூபா.

இந்த விவகாரம் பற்றி பேசியிருப்பவர் “முதல்வர் சொன்னதால்தான் நான் சசிகலாவுக்கு வசதிகளை செய்து கொடுத்தேன் என்று மிஸ்டர் ராவ் சொல்லியிருப்பது சிரிக்க வைக்கிறது.

சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்ய சொல்லி முதல்வரோ, அமைச்சர்களோ வாய்மொழி உத்தரவிட்டால் அதற்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை அவர்கள் எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டாலும் கூட, அவை சட்டவிதிகளுக்கு முரணாக இருந்தால் ‘இதை செய்ய சட்டம் அனுமதி தரவில்லை.’ என்று அதிகாரிகளும் பதிலுக்கு எழுத்துப்பூர்வமாக பதிவிட்டுவிட வேண்டும்.

ஏனென்றால் சட்டத்தை காப்பாற்றிச் செல்வதுதான் அதிகாரிகளின் கடமை.” என்று சொல்லியிருப்பவர் “சசிகலாவுக்கு பரப்பன சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது எனும் புகாரை நான் எந்த சுய விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் வெளிப்படுத்தினேன்.

அந்த மன்னார்குடி மாபியாவின் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை! அவர்களிடமிருந்து எந்த மாதிரியான வழக்குகள் வந்தாலும், அதை எதிர்கொள்ள நான் தயாராகவேதான் இருக்கிறேன். எல்லா ரிஸ்குகளையும் அறிந்தே அந்த முறைகேடை வெளிப்படுத்தினேன்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிர்கட்சிகள்தான் சசிகலா டீமை ‘மன்னார்குடி மாஃபியா’ என்பார்கள். ஆனால் கர்நாடக பெண் போலீஸ் அதிகாரி இந்த வார்த்தையை பயன்படுத்தி சசி அண்ட்கோவை விமர்சித்திருப்பதற்கு எதிராக பொங்கி எழ துவங்கியுள்ளது தினகரன், திவாகரன் கும்பல்.