manmohan singh attack prime minister modi
தேசபக்தி விவகாரத்தில் மோடியின் போதனை காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் சர்தார் அர்ஷத் ரபீக், மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் குஜராத் முதல்வராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
ஒரு புறம் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ டி.ஜி. குஜராத் தேர்தலில் தலையிட்டு அகமது படேல் முதல்வராக வேண்டும் என்கிறார், இன்னொரு புறம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மணி சங்கர ஐயர் வீட்டில் கூடுகின்றனர். அந்தக் கூட்டத்துக்குப் பிறகே குஜராத் மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஏழை மக்கள், மோடி ஆகியோர் காயப்படுத்தப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் சந்தேகங்களை எழுப்பும் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த விவகாரம் என்ன, எதற்காக இந்தக் கூட்டம் என்பதை நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தெரிவித்தாக வேண்டும் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து தவறான குற்றச்சாட்டுகளை வைத்து ஆதாயம் தேட பிரதமர் மோடி முயற்சிக்கிறார். பாகிஸ்தான் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், குஜராத் தேர்தல் குறித்து பேசவில்லை. குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் பாகிஸ்தானை மோடி கையில் எடுத்துள்ளார். தேசபக்தி விஷயத்தில் காங்கிரஸுக்கு மோடியின் போதனை தேவையில்லை. பிரதமர் அலுவலக மதிப்பை பிரதமர் மோடி குறைக்கிறார். தவறான தகவல்களை அளிக்கும் பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
