திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பத்தில் இயங்கி வரும் ‘வன்னியர் கல்வி அறக்கட்டளை’யானது, ‘ராமதாஸ் கல்வி அறக்கட்டளை’ என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பா.ம.க.வினுள்ளும், வன்னியர் சமுதாயத்தினுள்ளுமே எதிர்ப்பு வெடித்திருக்கிறதாம் டாக்டர். ராமதாஸுக்கு எதிராக. இந்த பஞ்சாயத்துக்களைப் பற்றிப் பத்திரிக்கைகளும், அரசியல் புலனாய்வு இதழ்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக் கொண்டுதான் உள்ளன. இந்த நிலையில் மணிவண்ணன் என்பவர் ராமதாஸுக்கு எதிராக பெரும் ரெளத்திரத்துடன் சீறி எழுந்து புகார் மழை பொழிந்து வருகிறார்.

யார் இந்த மணிவண்ணன்?....1993ல் பா.ம.க.வை முதன் முதலில் உடைத்து, பல நிர்வாகிகளுடன் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார் இவர். பின் சமீபகாலமாக அரசியலில் இல்லாமல் பொது தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு வாரம் இருமுறை இதழில் அளித்திருக்கும் பேட்டியில்... “காடுவெட்டி குரு தான் அனைத்து வன்னிய சொந்தங்களிடம் இருந்தும், வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிதி திரட்டிக் கொடுத்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர் கல்வி அறக்கட்டளையை, சரஸ்வதி கல்வி அறக்கட்டளை! என்று தன் மனைவி பெயரில் மாற்றினார் ராமதாஸ். அப்போது எழுந்த பெரும் பிரச்னையாலும், தேர்தலில் தோற்றதாலும் மீண்டும் வன்னியர் கல்வி அறக்கட்டளையாகவே மாற்றினார். சிதம்பரத்தில் உள்ள வன்னியர் வளர்ச்சிக் கழகத்தை மருமகள் பெயருக்கு மாற்றிவிட்டார். இதேபோல் விருத்தாச்சலம், தருமபுரி, மயிலாடுதுறை, திண்டிவனம் என பல இடங்களில் இருந்த வன்னியர் சொத்துக்களை கல்வி அறக்கட்டளையில் இணைத்துவிட்டார் ராமதாஸ்.

வாக்கு வங்கி நாடகத்துக்காகவே ராமதாஸ் சொல்படி நலவாரியம் துவங்கப்பட்டுள்ளதே தவிர, அதில் எந்த செயல்பாடுகளும் நடக்காது. வழக்கு, ஜெயில், தண்டனை என என்போல் ராமதாஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும். என் போன்றோர் மட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 நபர்களின் குடும்பங்களையும் நட்டாற்றில் நிற்க வைத்துவிட்டு, வன்னிய சொந்தங்களுக்குச் சொந்தமான பொதுச்சொத்துக்களை தனதாக்கிக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ராமதாஸ்!” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். மணிவண்ணனின் புகார்களுக்கு பதில் சொல்லாத பா.ம.க., ‘வன்னிய கல்வி அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து உள்நோக்கத்துடன் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சூழல் சுகமாகட்டும்!

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!