'தீட்டு' என்று கூறி அன்று ஒதுக்கியது போல் இன்று 'நீட்' என்று கூறி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள்’ என்று பேசியிருக்கிறார் ஜவாஹிருல்லா.

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். 

அப்போது பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ‘ஆளுநரின் கடிதத்தை படித்து மிகுந்த வேதனையில் உள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை மத்திய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனை உணர்ந்துதான் அன்றே அண்ணா, ’ஆட்டுக்குத் தாடி தேவையில்லை. மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்றார்.

'தீட்டு' என்று கூறி அன்று ஒதுக்கியது போல் இன்று 'நீட்' என்று கூறி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள். நீட் தேர்வை மையமாக வைத்து இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதால் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான முக்கியத்துடம் குறைவதையும் சுட்டிக்காட்டினார். மருத்துவராகும் ஒருவருக்கு பொது அறிவு இருக்க வேண்டியது அவசியம்.

சமூக நீதியைக் காக்க சமூக நீதிக் கூட்டமைப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார். அதை வரவேற்கிறோம். அதேபோல், மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் முன்னெடுக்க வேண்டும். அது மாநிலங்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை காமாலைப் பார்வையின் அறிக்கை என்று ஆளுநர் கூறியிருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல். ஆளுநர் தனது கடிதத்தில் தனது தனிப்பட்ட கருத்துகளைத் திணித்திருக்கிறார்’ என்று பேசினார்.