வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக முதன்மையான கட்சியாக வரும் என்று கூறப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை அடையும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வழக்கமாக வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல் என்றால், அஸ்ஸாம் மட்டுமே கவனம் பெறும். பிற மாநிலங்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படாது. ஆனால், தற்போது வட கிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களும் உற்று நோக்கப்படுகின்றன. இப்போது நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மணிப்பூரும் ஒன்று. இத்தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் பாஜக. கடந்த முறை பாஜக ஆட்சியைப் பிடித்ததே விமர்சனத்துக்குள்ளான நிலையில், இந்த முறை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் மீண்டும் உட்காருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள். ஆட்சியை ஒரு கட்சி பிடிக்க வேண்டுமென்றால் 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 1967 முதல் 2017 வரை காங்கிரஸ், மணிப்பூர் மக்கள் கட்சி போன்றவை கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. குறிப்பாக 2002 முதல் 2017ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் மணிப்பூரில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஒக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் அசைக்க முடியாத தலைவராக 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். ஆனால், 2017-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மெஜாரிட்டியைப் பெறாதபோதும் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. மெஜாரிட்டிக்கு 3 இடங்கள்தான் குறைவாக இருந்தது. பாஜகவோ 21 இடங்களில் வெற்றி பெற்று, மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தது. ஆனாலும், நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சி, சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தோடு, வெற்றிகரமாக 5 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளது. 

இந்த முறை பாஜக தனித்து தேர்தலில் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ளது. நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன. ஆனால், போட்டி என்னவோ பாஜக - காங்கிரஸ் இடையேதான். கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்த போதும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதேவேளையில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசின் மீதான அதிருப்தி காரணமாக இந்த முறை நிச்சயமாக ஆட்சி அமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. 

கடந்த முறை போல அல்லாமல் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனித்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஒக்ராம் இபோபி சிங் முதல்வர் வேட்பாளராக உள்ளார். பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் நாங்தோம்பம் பீரேன் சிங் களத்தில் உள்ளார். மணிப்பூரில் ஆயுதப் படை சட்டத்தைத் திரும்ப வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். காங்கிரஸ் கட்சி இதை காதில் வாங்கிக்கொள்ளாததைப் போல பாஜகவும் அதை நீக்க முன்வரவில்லை. மேலும் அண்மையில் நாகலாந்தில் ராணுவத்தினரால 12 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூர் தேர்தலில் எதிரொலித்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் 86 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக முதன்மையான கட்சியாக வரும் என்று கூறப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை அடையும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன,. 3 கருத்துக்கணிப்புகள் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரிவித்துள்ளன. ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சி ஆகியவை கிங்மேக்கர்களாக இருக்கும். மணிப்பூரில் என்ன நடக்கும் என்பது நாளை காலை 11 மணிக்கு தெரிந்துவிடும்.