பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த தமிழ்ப் பெண் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும் "புட்பேங்க் ஆப் இந்தியா" என்ற அமைப்பை நிர்வகித்து வருபவர் சினேகா மோகன்தாஸ். இவரது சேவையைப் பாராட்டி கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருடன் 7 சாதனைப் பெண்களுக்கும் மோடியின் ட்விட்டரை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த நாளில் வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் சென்னை மண்டலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ட்வீட்டரில் பதிவு  செய்திருக்கும் சினேகா மோகன்தாஸ்... “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மையமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில்  கோவை, ஈரோடு, மதுரை, சேலம் வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி   உள்ளிட்ட மாவட்டங்களின் 200 தொகுதி பொறுப்பாளர்கள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.