முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன. முதலமைச்சருடன் சேர்ந்து மரியாதை செலுத்த அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலை 9 மணிக்கு எல்லாம் நினைவிடத்திற்கு வந்துவிடவேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பழைய நினைவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சற்று தாமதமாக வந்துள்ளார். அதற்குள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் முன்வரிசையில் இடம் பிடித்துவிட்டனர். இருந்தாலும் பரவாயில்லை என்று மணிகண்டன் பின்வரிசையில் கால்கடுக்க காத்திருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில் மணிகண்டன் விழாவிற்கு வரமாட்டார், அல்லது தனியாக வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிவால் ஆடிப்போன அவர் முதலமைச்சரை நேருக்கு நேர் பார்த்து ஒரு வணக்கம் சொன்னால் போதும் என்று அங்கு காத்திருந்தார்.

அன்றைய தினம் ராமநாதபுரம், மதுரையில் பரவலாக மழை கொட்டியதால் முதலமைச்சர் பசும்பொன் வர தாமதமானது. ஆனாலும் கூட கால்கடுக்க மணிகண்டன் உள்ளிட்டோர் காத்திருந்தனர். முதலமைச்சர் உள்ளே வந்ததும், முன்னாள் இருந்த எம்எல்ஏ ஒருவரை தள்ளிச் செல்லுமாறு மணிகண்டன் கூற அதற்கு ஏன் என கேட்க நான் முன்னாள் அமைச்சர் எனச் சொல்ல உங்களை போல் நானும் ஒரு எம்எல்ஏ தான் என அவர் பதில் கூற அந்த இடமே டென்சன் ஆனது.

இதனால் ஆடிப்போன மணிகண்டன் மேற்கொண்ட தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டாம் என்று பின்னால் நின்று கொண்டார். அவர் எதிர்பார்த்தது போல் முதலமைச்சரை பார்க்கவும் முடியவில்லை. வணக்கம் வைக்கவும் இல்லை. முதலமைச்சரும் வந்த வேலையை முடித்துவிட்டு புறப்பட்டார்.