mani sankar speech about his attak of modi
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்குரிய தண்டனையை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்று ‘சஸ்பெண்ட்’செய்யப்பட்ட மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக் கருத்து
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவும், 14-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும் நடக்க இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இழிவானவர்
அவர் வெளியிட்ட கருத்தில், “ அம்பேத்கர் பெயரைச் சொல்லி சிலர் வாக்கு கேட்கிறார்கள். நாட்டை கட்டமைக்க அவரின் பங்களிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள். இது பிரதமர் மோடியின் இழிவான மனநிலையை காட்டுகிறது. இந்த நேரத்தில் இப்படி அசிங்கமான அரசியலை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?’’ எனக் கேட்டு இருந்தார்.
கண்டனம்
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ேபசியதற்கு பா.ஜனதா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியும், தனது தேர்தல் பிரசாரத்தில் இதைக் குறித்து மண்ணின் மைந்தரை இழிவானவர் என மணிசங்கர் கூறுகிறார் எனப் பேசினார்.

மன்னிப்பு கேட்க உத்தரவு
மணி சங்கர் அய்யரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விடுத்த அறிக்கையில், “ பிரதமர் மோடி குறித்த தனது பேச்சுக்கு மணி சங்கர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். பா.ஜனதாவும், பிரதமரும் கடும் சொற்களால் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சி என்பது வித்தியாசமான கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டது. மணிசங்கரின் இதுபோன்ற கருத்தை நான் ஆதரிக்கமாட்டேன், அவர் கூறியதற்கு மன்னிப்பு கோர கட்சி விரும்புகிறது’’ எனத் தெரிவித்தார்.

ஏன் பேசுகிறார்?
இதையடுத்து, மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், “ பாபாசாகேப் அம்பேத்கர் மையத்தின் தொடக்கவிழாவில் காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும் ஏன் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேச வேண்டும்?. எங்கள் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி நாள் தோறும் அவதூறான வார்த்தைகளில் விமர்சிக்கிறார். நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக இருந்தாலும், எந்த பொறுப்பிலும் இல்லாதவன்.
சஸ்பெண்ட்
அதனால், அவரின் மொழியில் பிரதமருக்கு பதில் அளித்தேன். நான் பிரதமர் மோடி தரம் தாழ்ந்த மனநிலை கொண்டவர் என்ற அர்த்தத்தில் கூறினேன். ஆனால், இந்தி மொழியில் அது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது. அதற்கு மன்னிப்பு கோருகிறேன் ஆனால், ஒருபோதும் மோடியின் பிறப்பு குறித்து விமர்சிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மணிசங்கர் அய்யரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்துசஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் கட்சி நடவடிக்ைக எடுத்தது.

தண்டனைக்கு தயார்
இந்நிலையில், மணி சங்கர் அய்யர் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்குரிய தண்டனையை ஏற்க நாந் தயாராக இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.
