தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் பிற இடங்களில் என மொத்தம் 5300 டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மதுபானங்கள் விற்கப்படுகின்றன என்ற வாதத்தையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்து உள்ளதாகவும் கூறியது. இது தொடர்பான வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகவே மீண்டு கடைகளைத் திறப்பதற்கு எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிகிறது. இதையடுத்து நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.

இதில் தமிழகத்தில் சிறப்பு மண்டலங்களைத் தவிரப் பிற இடங்களில் என மொத்தம் 5300 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. உச்சநீதிமன்ற விதிகளை உரியவகையில் நடைமுறைப்படுத்த டிஜிபி உத்தரவின் பேரில் நாளை டாஸ்மாக விற்பனை செயல்பட இருக்கிறது. இந்த விதிமுறைகளைப் பின்பற்ற அனைத்து மாவட்ட எஸ்.பி மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதில் 550 பேர் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நிற்கவேண்டும், மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். மேலும் டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்கவேண்டும், மது விநியோக கவுண்ட்டர்கள் அதிகரிக்கச் செய்யவேண்டும், பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும் என உத்தரவுகள் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.