பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விண்வெளி சார்ந்த சாதனைகள் நாட்டில் எதுவும் நடந்ததே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மோடி அரசு முயற்சி மேற்கொள்கிறது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், எதிர்பாராமல் தகவல் துண்டிப்பு ஏற்பட்டதால், முக்கியமான பணியை மேற்கொள்ள முடியாமல் போனது. என்றபோதும் நிலவின் தென் முனையை ஆராய அனுப்பப்பட்ட ‘சந்திரயான் 2’ 95 சதவீதம் செயல்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இறுதியில் சிக்னல் இழந்ததால் விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல், நாட்டு மக்களும் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர்பாக சமூக ஊடங்களில் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டனர். கண் கலங்கிய இஸ்ரோ  தலைவர் சிவனை மோடி கட்டி அணைத்து தேற்றிய காட்சியை பாஜகவினர் அதிகளவில் சமூக ஊடங்களில் பகிர்ந்தனர். 
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுபற்றி தனது கருத்தைத்தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய மம்தா, “சந்திரயான் விண்கலம் இப்போதுதான் முதன்முறையாக ஏவப்பட்டது போன்ற தோற்றத்தை பாஜக உருவாக்கிவருகிறது. இதற்கு முன்பு விண்வெளி சார்ந்த சாதனைகள் நாட்டில் நிகழ்ந்ததே இல்லையா? அது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சிசிக்கிறது. நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார வீழ்ச்சியைத் திசை திருப்பவே செய்யப்படுகிறது என்ற கருதவேண்டியிருக்கிறது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அதையேதான் நானும் கூறுகிறேன். பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்.” என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.