நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி பரிசீலிக்க தயார் என்று காங்கிரஸ் மேலிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆசையை தூண்டும் வகையில் சேதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

   நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று ராகுல் காந்தி நேற்று பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார். மேலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க பெரும்பாலான கூட்டணி கட்சிகள் தயங்கி வருகின்றன. ராகுலும் கூட பிரதமர் வேட்பாளர் என்கிற நிலைக்கு தற்போதைக்கு செல்ல வேண்டாம் என்றே கருதுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்தகூட்டணி தான் முக்கியம் என்று ராகுல் நினைக்கிறார்.

  தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரதமர் பதவி குறித்து யோசித்துக் கொள்ளலாம் என்பது தான் ராகுலின் வியூகமாக உள்ளது. ஆனால் ராகுலுடன் இருக்கும் சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோர் தான் மோடிக்கு எதிராக வலுவான ஒரு பிரதமர் வேட்பாளரை களம் இறக்க வேண்டும். அப்போது தான் பா.ஜ.கவின் பிரச்சாரங்களை முறியடித்து நேருக்கு நேர் வெல்ல முடியும் என்பது ராகுலின் சகாக்களின் யோசனையாக உள்ளது.

   சோனியாவும் கூட ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட வேண்டும் என்றே காய் நகர்த்துகிறார். ஆனால் ராகுலோ, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதே முக்கியம் என்று நினைக்கிறார். இதற்கு கூட்டணி அவசியம் என்பதால், பிரதமர் வேட்பாளர் என்ற பதவிக்கு ஆசைப்பட்டு கூட்டணியை கலகலக்க வைத்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்.

   தன்னுடைய பிரதமர் வேட்பாளர் பதவியை கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அபிமானத்தை பெறலாம் என்றும் ராகுல் கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. மிக முக்கியமாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைக்க  வேண்டும் என்றால் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூட தயக்கம் வேண்டாம் என்று ராகுல் நினைக்கிறார். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளை மம்தாவிடம் பேரம் பேசி வாங்கிவிடலாம் என்றும் ராகுல் எதிர்பார்க்கிறார்.

   எனவே தான், பிரதமர் வேட்பாளர் என்கிற ஆசையை மம்தாவிற்கு தூண்டிவிடும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மம்தாவை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.