கொல்கத்தாவில் இடதுசாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக பெரிய பேரணியை நடத்திக்காட்டியது. இந்தத் தகவல் மக்களிடம் செல்வதை தடுக்கவே சிபிஐ அதிகாரிகளை கைது செய்து தர்ணா போராட்ட நாடகம் ஆடுகிறார் மம்தா பானார்ஜி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் 5 சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐஅதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீஸார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதில் 5 சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினேன். இதன்காரணமாக மேற்குவங்கத்தை குறிவைத்து பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார். இப்போது சிபிஐ ஏவிவிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் இடதுசாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக பெரிய பேரணியை நடத்திக்காட்டியது. பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த இந்த பேரணியில் பெரும் மக்கள் கூட்டம் திரண்டது. ’’இந்தப் பேரணியின் எழுச்சி மக்களிடம் செல்வதை தடுக்கவே சிபிஐ அதிகாரிகளை கைது செய்து தர்ணா போராட்ட நாடகம் ஆடுகிறார் மம்தா பானார்ஜி. அவரது நாடகத்திற்கு மோடியும் உடந்தையாக இருக்கிறார். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.