குடியுரிமை திருத்தச் சட்டம் மீது தைரியம் இருந்தால் பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்கள், இதர இந்திய மாநிலங்களிலும் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு நகரிலும் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இச்சட்டத்துக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேரணிகளை நடத்திவருகிறார். இச்சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இச்சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே இரு கட்டமாகப் பேரணி நடத்திய மம்தா, இன்று கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.   
கொல்கத்தாவில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசுகையில், “ நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காகவே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. பாஜக சமூகத்தின் அனைத்து தூண்களையும் நொறுக்குகிறது. பாஜக கட்சியே 1980-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சி 70 ஆண்டுகால நம்முடைய குடியுரிமை ஆவணங்களை கேட்கிறது. உண்மையிலேயே பாஜகவுக்கு தைரியம் இருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு  ஆகியவற்றின் மீது ஐநா பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள்” என்று தெரிவித்தார்.