திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி கடிதம் வரும் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு.

திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். வரும் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அந்த கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார். 

தேசிய அளவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாளுக்கு நாள் மக்கள்மத்தியில் செல்வாக்கை இழந்து, வலுவிழந்து வருகிறது. இது கவலைக்குரிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்தியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. எனவே அசுர பலம் பெற்று வரும் பாஜகவை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில் இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவேதான் மேற்குவங்க முதலமைச்சர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த வரிசையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் எதிர்க் கட்சித் தலைவர்கள் வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும், மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளின் மூலம் எதிர்க்கட்சிகள் குறி வைக்கப்படுகின்றன, ஒரு வலுவான குடியரசை கட்டமைக்க பலமான எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய ஆளும் தரப்பால் திட்டமிட்டு ஒடுக்கப்படும் நிலை உள்ளது. சர்வதேச அளவில் நம் நாட்டின் மதிப்பு வேறு விதமாக பார்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை தடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 

குடியரசு தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது அதில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்க வரும் 15ஆம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லியில் சந்திப்போம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஏற்கனவே முயற்சித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியும் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.