சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது என கே.எஸ்.அழகிரியின் அறிக்கைக்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது வைகோ மிகவும் ஆவேசமாக இருந்தார். காஷ்மீரை ஒரு போதும் பிரிக்கவிடமாட்டோம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து என்று முழங்கித் தீர்த்தார் வைகோ. மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிபோக காரணமே காங்கிரஸ் தான் என்று வைகோ கூறியதை அடுத்து திமுக கூட்டணியினர் அதிர்ந்து போயினர்.

 

இதற்கு கண்டனங்களை தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. 
காங்கிரஸின் கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸையே விமர்சிக்கும் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். 18 ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த திமுகவுக்கு பச்சை துரோகம் செய்தவர் வைகோ எனவும், பலமுறை கருணாநிதியை முதுகில் குத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என மதிமுக துணைபொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார். நாகரிகம், ஜனநாயம் குறித்து பேச கே.எஸ்.அழகிரிக்கு எந்த தகுதியும் இல்லை. வைகோ பனங்காட்டு நரி, சலசலப்புக்குகெல்லாம் அஞ்ச மாட்டார்.

வைகோ கூறியது முழுமையான உண்மை, உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். மாநிலங்களவையில் வைகோ பேசியது குறித்து காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கே பாராட்டியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளது.