குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் மாணவர்கள், பொதுமக்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். கமல்ஹாசனை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்காத நிலையில், பல்கலைக்கழக முகப்பு நுழைவு வாயில் கேட்டின் வெளியே நின்று மாணவர்களை சந்தித்து பேசினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், மாணவர்களை அகதிகளாக மாற்றி வருகிறார்கள். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும். ஆட்சியாளர்களின் கையில் நேர்மை இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கட்சி சார்பற்ற முறையில் கூட்டம் நடத்தினால் நிச்சயம் கமல் அழைக்கப்படுவார் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.