*    துக்ளக் விழாவில், ஈ.வெ.ரா.குறித்து ரஜினிகாந்த் பேசியதில் தவறில்லை. ஈ.வெ.ரா. நாட்டுக்கோ, தர்மத்துக்கோ எதுவும் செய்யவில்லை. நல்லது பேசுபவர்களை தாக்கக்கூடிய இயக்கமாக அது உள்ளது. ஹிந்து கலாசாரத்தையும், கடவுள்களையும் இழித்து பேசிவரும் இவர்களுக்கு, மற்ற மதத்தினரை பேசுவதற்கு தைரியம் இல்லை. 
-    செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜம் (மன்னார்குடி ஜீயர்)
*    வீர சாவர்க்கர் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. வரலாறு தெரியாதவர்கள்தான் இப்படி செய்கிறார்கள். இந்தியாவில் சமூக குற்றங்கள் நடக்கின்றன. சமூக பாகுபாடின்றி பழகும் எண்ணம் ஏற்பட வேண்டும். இளைஞர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதென்பது, நாட்டை சேதப்படுத்துவதற்கு சமம் ஆகும். 
-    வெங்கய்யா நாயுடு (துணை ஜனாதிபதி)
*    தேனி ஆவின் நிர்வாகக் குழு தலைவர் ஓ.ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமனத்தை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. உரிய விதி முறைகளைப் பின்பற்றி, ஆவின் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை! என உத்தரவு. 
- பத்திரிக்கை செய்தி


*    போராட்டம் என்ற பெயரில், ‘ஆசாதி’ என அதாவது ‘வேண்டும், வேண்டும் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும்’ என கோஷமிடுவோர் மீது தேச துரோக வழக்கு பாயும். நம் நாட்டில் வசித்து வருவோர், நமக்கு எதிராக கலகம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதுவும் தெரியாத பெண்களை போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு, வீட்டில் கணவர்கள் தூங்குவது மிகப்பெரிய குற்றம். 
-    யோகி ஆதித்யநாத் (உ.பி. முதல்வர்)

*    குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. எனவே அதை அமல்படுத்துவதும், அமல்படுத்தாமல் விடுவதும், மாநில அரசுகளின் பங்கு ஒன்றுமில்லை. அதேசமயம், மத்திய அரசிடம் போதுமான ஆள்பலம் இல்லாததால், மாநில அரசு அதிகாரிகள் துணையுடன் தான், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு பணிகளை மேற்கொள்ள முடியும். 
-    சசி தரூர் (காங்கிரஸ் எம்.பி.)

*    1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து,  துக்ளக் வார இதழ் அட்டையில், கருப்பு வர்ணத்தை பூசி, தலையங்கத்தில் ‘அயோத்தியில் நடந்த அயோக்கியத்தனம்’ என சோ விமர்சனம் செய்ததை ரஜினி ஏன் நினைவு கூறவில்லை? ஜெ., ஆட்சியை அகற்ற, 1996ல் தி.மு.க. - த.மா.கா. கூட்டணி அமைய, சோ துணை புரிந்ததை ரஜினி ஏன் சுட்டிக்காட்டவில்லை? இவற்றை மறைத்துவிட்டு மறக்க கூடாத சம்பவமாக 1971ல் நடந்ததை மட்டும் கூறியது ஏன்?
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    இப்போது உள்ள அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. அதனால் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நடிகர் ரஜினிகாந்த் என்ன சொன்னாலும் அதை எதிர்க்கின்றனர். ரஜினி தவறாக சொல்லியிருந்தால் அதை மக்களே புறக்கணித்திருப்பர். 
-    பழ.கருப்பையா (மூத்த அரசியல்வாதி)

*    மன்னன் ராஜராஜன், தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். அந்த கோவிலுக்கு தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும்! என்றால், உரிமை இல்லை என்கிறார்கள். தமிழர்கள் கட்டிய கோவில், தமிழ் மன்னன் கட்டிய கோவில், ஆனால் தமிழனுக்கு உரிமையில்லை. 
-    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

*    நான் பா.ஜ.க. தலைவரானதும், பிரதமர் மோடியை சந்தித்தேன். அவர் என்னை ஆசீர்வதித்தார். அவர் தலைமையில் நாடு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மோடியின் சீரிய வழிகாட்டுதலின்படி பா.ஜ.க.வை வழிநடத்திச் செல்வேன். நாடு முழுவதும், வீடுதோறும் பா.ஜ.க.வின் சித்தாந்தங்களைப் பரப்புவேன். 
-     ஜே.பி.நட்டா (பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர்)
*    ஸ்டாலின் தான் கருணாநிதிக்கு அடுத்து தலைவராக தொடர்கிறார். தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது! என்றும், அ.தி.மு.க.வில் அனைவரும் முதல்வர்கள்தான்! என்றும் இ.பி.எஸ். சொல்கிறார். அப்படியானால் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பதவியை பழனிசாமி ஒப்படைப்பாரா?
-    துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!