பெங்களூருவில் பிடிபட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் விவகாரத்தில் பகீர் தகவல்கள்! ஓட்டு போடாமல் இருக்க வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாங்கப்பட்டது விசாரணையில் அம்பலம்!       பெங்களூர் : இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்களிக்காமல் இருக்கு பணம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட அவலம் கர்நாடக தேர்தலில் நடந்தது அம்பலமானது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் இரு தினங்களுக்கு முன் பண்டலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை பிடிபட்ட சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்.ஆர். நகரில் முன் தினம் பிடிபட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் போலியாக தயார் செய்யப்பட்டவை என முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவை அனைத்தும் உண்மையான வாக்காளர் அடையாள அட்டை கள் தான் என்று தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட மண்டல்களில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளுடன் சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர், முகவரி, மொபைல் எண்  , கட்சி பின்னணி உள்ளிட்ட தகவல்கள் தனித்தனியாக குறிப்படப்பட்டிருந்ததன் மூலம் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களுக்கு சாதகமாக இல்லாத வாக்காளர்களிடம் யாருக்கும் வாக்குறுதி பெற்று பணம் கொடுத்து அட்டைகளை ஒரு தரப்பு சேகரித்து பதுக்கி வைத்துள்ளனர்.   

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தரப்பில் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருவதால் தேர்தல் ஆணையம் முடிவுக்கு வரமுடியாமல் திணறி வருகிறது. மேலும் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து மத்திய துணை தேர்தல் ஆணையர் பூஷன் குமார் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளார். 12-ந் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் அங்கு இன்று மாலையுடன் உச்சகட்ட பிரச்சாரம் முடிகிறது. எனவே ஆர.ஆர். நகரில் தேர்தல் நடக்குமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது இன்று மாலைக்குள் தெரியும். 

இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தான் தேர்தல் ஆணையத்தின் முன் புகார்களாக குவிவது வழக்கம். மாறாக வாக்கு சாவடி பக்கமே எட்டி பார்க்க கூடாது என பணம் கொடுத்து வாக்காளர் அடையாள அட்டைகளை பறித்து வைத்த சம்பவம் கர்நாடகா தேர்தலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வாக்களிக்கவும் பணம், வாக்களிக்காமல் இருக்கவும் பணம் என கொள்கைகளை விட தேர்தலில் பணமே முக்கிய பங்கு என்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?. கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வருமா? அல்லது தொடர்ந்து வேடிக்கை பார்க்கத்தான் போகிறதா? என்பதே ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை உள்ள பெரும்பான்மையினரின் கேள்வி.