நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் பற்றி முழுமையாக கணக்கெடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். 

கடலூரில் நிவர் புயல் பாதித்து குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள். நிவர் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காவல்துறை உள்ளிட்ட மீட்புப் படைகளை தொடர்பு கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இன்றைக்கு நிவர் புயல் தமிழகத்துக்கு வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.  நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது என்றார். 

நிவர் புயல் காரணமாக பாதிக்கப்படும் 13 லட்சம் பேர் வரை தங்க வைக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு முகாம்களை உருவாக்கியிருந்தோம். தற்போது தமிழகம் முழுவதும் 2,999 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியிருக்கிறார்கள். கடலூரில் மட்டும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுகிதளில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் தங்க வைத்துள்ளோம். இங்கு 52 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். கடலூரில் புயலால் சாய்ந்த 77 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புயலால் விழுந்த 321 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 

மேலும், கடலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் பற்றி முழுமையாக கணக்கெடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் புயலால் அதிகளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடம் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.