தேர்தல் அதிகாரிகளை சந்திக்க வரவில்லை என்றும் அவர்களிடம் நேரமும் கேட்கப்படவில்லை என்றும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார். 

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து நாங்களே உண்மையான அதிமுக என்று இரு தரப்பும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். 

இதைதொடர்ந்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு அணியும் ஒரு அணியாக ஒன்று சேர்ந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அதில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சசிகலா தினகரனுக்கு எதிராக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதாவது இரட்டை இலையையும் கட்சியையும் மீட்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பிரமாண பத்திரங்களை திரும்ப வாங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் எம்.பி, தேர்தல் அதிகாரிகளை சந்திக்க வரவில்லை என்றும் அவர்களிடம் நேரமும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் சட்ட வல்லுநர்களுடனும், நண்பர்களுடன், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.