வெட்டவெளியில் மேற்கூரை இன்றி  புகைப்ப்படமின்றி மலரலங்காரம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் ஜெயலலிதா சமாதியில் தானே பூவை வைத்து படத்தை வைத்து வணங்கினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன். 

மாநிலங்களவைக்கு ஜெயலலிதா இருந்தபோது மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பதினான்கரை ஆண்டுகளாக மாநிலங்களவை எம்.பியாக இருந்தவர் மைத்ரேயன். ஜெயலலிதா காலத்தில் மோடிக்கும் அவருக்கும் இடையே தூதுவராக செயல்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பி.எஸ் அணிக்கு சென்றார். இந்நிலையில் இந்த முறையும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் ஜெயலலிதாவை நினைத்து கண்ணீர் மல்கினார். 


நேற்றுடன் அவரது பதவி காலம் முடிந்த நிலையில், சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதா நினைவிடம் மலர் அலங்காரமோ, அவரது புகைப்படமோ இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. பொதுவாக ஒரு விஐபி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த வருகிறார் என்றால் கட்சியினர் முன்கூட்டியே அலங்காரம் செய்து வைப்பார்கள். ஆனால், மைத்ரேயன் வந்தபோது ஜெயலலிதா நினைவிடம் எந்த அலங்காரமும் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மைத்ரேயன் தான் வாங்கிச் சென்ற பூக்களை ஜெயலலிதா சமாதி மீது தூவி, ஜெயலலிதா படத்தை தூக்கி வந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியினர் ஜெயலலிதா சமாதியில் முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதனால் மைத்ரேயனே ஜெயலலிதா சமாதியில் பூ தூவி அஞ்சலி செலுத்தினார்.