அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து தன்னிச்சையாக  கருத்து கூற வேண்டாம் என ஓ.பி.எஸ்  அணி நிர்வாகிகளுக்கு மைத்ரேயன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  அதிமுக இரண்டாக உடைந்து  சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து செயல்பட்டு வருகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஓபிஎஸ் அணி தனி ராஜாங்கம் நடத்தி வந்தது.

ஒபிஎஸ் அணியை எடப்பாடி அணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுக்கடித்து வந்தது. 

இதனால் ஒபிஎஸ் பேச்சுவார்த்தை தோல்வி எனவும் அணிகள் இணையாது எனவும் அறிவித்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி தரப்பினர் சொல்லி வந்தனர். அதன்படி தினகரனை முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தங்களது கோரிக்கைகளை எடப்பாடி தரப்பினர் ஓரளவு நிறைவேற்றி இருப்பதாகவும்,இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் அணியின் மைத்ரேயன் அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து தன்னிச்சையாக  கருத்து கூற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.