தமிழக அரசியலில் ஆளுங்கட்சியினரிடையே நடைபெற்று வரும் குதிரை பேரம் அனல் பறக்கிறது.
அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் இத்தருணத்தில் சசிகலாதான் நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
மறுபுறம் பன்னீர்செல்வம் கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார் என அவரது தரப்பு தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் எம்.பி.க்களான மைத்ரேயன், பி.ஆர். சுந்தரம், அசோக்குமார் உள்ளிட்ட 10 எம்.பிக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனது ஆதரவுகள் ஒவ்வொன்றாக பெருக தொடங்கியதையடுத்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மூலம் களத்தை விரிவு படுத்த தொடங்கியுள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சசிகலாவும் தனித்தனியே ஆளுனரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே விடாமல் சிறைபிடித்து காத்து வருகிறார்.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்துள்ளதாக ஓ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்த மனோரஞ்சிதம், சண்முகநாதன், ஆறுகுட்டி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே கவர்னரிடம் புகார் அளித்தனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.மைத்ரேயன் ராஜ்பவனில் ஆளுனரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

யார் முதலமைச்சர் என்ற ஆளுநரின் முடிவை எதிர்பார்த்து அதிமுகவினர் காத்திருக்கும் நிலையில் மைத்ரேயனின் இந்த சந்திப்பு பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த ஆலோசனையில் சசிகலா சட்டவிரோதமாக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதாகவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்படுவதாகவும் மைத்ரேயன் ஆளுநரிடம் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சசிகலா ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டு அனுமதி கிடைக்காத பட்சத்தில் பன்னீரின் ஆதரவாளர் மைத்ரேயனுக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியிருப்பது கார்டன் வட்டராத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
