Asianet News TamilAsianet News Tamil

“மகாத்மா காந்தியின் சாதி” குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு... வரிந்துகட்டும் அரசியல் கட்சிகள்

Amit Shah controversial speech Mahatma Gandhi Was Chatur Baniya Wanted Congress Dissolved
Mahatma Gandhi Was 'Chatur Baniya', Wanted Congress Dissolved Amit Shah
Author
First Published Jun 10, 2017, 7:09 PM IST


மகாத்மா காந்தியின் சாதி குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் பாரதியஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மகாத்மா காந்தியின் சாதி குறித்த அமித் ஷா வின் பேச்சுக்கு டுவிட்டரில் நெட்டிசன்கள் வரிந்து கட்டி கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, “ காாங்கிரஸ் கட்சியை உருவாக்கியதே ஒரு ஆங்கிலேயர்தான். காலப்போக்கில் அது அமைப்பாக மாறி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது. தனிப்பட்ட சித்தாந்தம், கொள்கைகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படவில்லை. பல்வேறு சித்தாந்தங்கள், சிந்தனைகள் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இகுந்தார்கள்.  ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஒரு வாகனம்தான் காங்கிரஸ் கட்சி.

மகாத்மா காந்தி தொலைநோக்கு சிந்தனை உடையவர். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்த காந்தி ஒரு புத்திசாலித்தனமான வணிகர்.அதனால்,தான், சுதந்திரம் பெற்றவுடன், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடக் கூறினார்.

சில கட்சிகளில் தான் இன்னும் வாரிசுரிமை இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சோனியா காந்திக்கு பின்,ராகுல்காந்தி என்று கூறிவிட முடியும். ஆனால், பா.ஜனதாவில் என்னுடைய தலைமைக்குபின் யார் வருவார் என்று யாராலும் கூறமுடியாது” என்றார்.

காங்கிரஸ்

மகாத்மா காந்தியின் சாதிகுறித்த அமித் ஷாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில், “ சாதிக்கு எதிராக இந்த நாட்டில் போரிடுவதற்கு பதிலாக, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா  தேசப்பிதாவின் சாதியைக் கூறி பிளவுபடுத்தப்பார்க்கிறது. இதில் இருந்தே அந்த கட்சியின் குணங்கள், தன்மையும், தலைவர்களின் தன்மையும் தெரிந்துவிடும்.

அந்த கட்சியின் தலைவருக்கே இப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தால், இந்த நாட்டை அந்த கட்சி எப்படி வழிநடத்துகிறது என்பதை நினைத்தாலே கொடுமையாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களையும், மகாத்மா காந்தியையும் அவமானப்படுத்தியதற்கு அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கோரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கியஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “மகாத்மா காந்தியின் சாதிப்பெயரை கூறி அவரை புண்படுத்திவிட்டனர். சம்பரன் சத்யாகிரக யாத்திரையின் 100-வது ஆண்டுவிழா கொண்டாடும் வேளையில், பா.ஜனதா தேசியத்தலைவர் 1.25 கோடிமக்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டார். கிரிமனல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சிறையில் இருந்த ஒருவர், மகாத்மா காந்தியை பற்றி பேசுகிறார். இது வெட்கப்படக்கூடியது, மன்னிக்கமுடியாதது” எனத் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் விடுத்த அறிக்கையில், “ அமித் ஷா தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி, அதை வாபஸ் பெற வேண்டும். இது வேண்டுமென்ற பேசப்பட்ட கருத்து. இதை ஏற்றுக்கொள்ள முடியாது, துரதிருஷ்டமானது. நாட்டின் தேசியப்பிதா மகாத்மா காந்தி.

உலகின் ஒரு அடையாளமாக காந்தி திகழ்ந்து வருகிறார். அதிகாரத்தில் இருந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைத்துவிடக்கூடாது.  பொதுவாழ்வில் இருப்பவர்கள் இதுபோன்ற தலைவர்களைப் பற்றி பேசும் போது, மிகுந்த மரியாதையுடனும், கவனமான வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios