முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. சுமார் 5 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கபடவில்லை.

பின்னர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்டோபர் 7ம் தேதி கூட்டாக அறிவிப்பார்கள் என்று கூறியுள்ளனர். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வந்தார். மேலும், இருவரும் அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பகுதியில் காந்தியின் திருவுருவப் படத்துககு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார்.  ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் இதில் ஓ. பன்னீர்செல்வம் புறக்கணிக்காமல் கலந்து கொண்டார். முதல்வரும் துணை முதல்வரும் அருகருகே நின்றும் இருவரும் வழக்கமான புன்னகையோடு உரையாடல்களை மேற்கொள்ளவில்லை. ஆளுநர் காந்தியடிகளின் படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்திய பிறகு, முதல்வர் எடப்பாடி மலர்களை தூவி மரியாதை செய்தார். 

அதன் பின் பன்னீர்செல்வத்தை பார்த்து கை காட்டினார் எடப்பாடி. அதன் பிறகு பன்னீர்செல்வம் காந்திக்கு மரியாதை செலுத்தினார். அதேபோல், ஆளுநர் உடன் இரு பக்கமும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அமர்ந்திருந்த போது இருவரிடம் ஆளுநர் சில நிமிடங்கள் பேசினார்.