மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலை ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.

பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கட்சிகளின் பிரசார களமும் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், இங்குள்ள மலபார் ஹில் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற மங்கல் பிரபாத் லோதா தற்போது ஆறாவது முறையாக பாஜக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார்.

மும்பை பாஜக தலைவரான மங்கல் பிரபாத் லோதா, தன்னிடம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 252 கோடி ரூபாய் எனவும் அசையா சொத்துகளின் மதிப்பு 189 கோடி ரூபாய் எனவும் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் சார்ந்த துறையில் உள்ள இவர் தனக்கு 283 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.