மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி நேற்று இரவு அழைத்தார். இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இதனால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் விலகுவதாகவும் அறிவித்தார்.

இதைத் தொடந்து சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. மேலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், சோனியா காந்தியை  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், “ தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, சிவசேனாவின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே, இன்று மாலை ஆளுநர் கோஷியாரியைச் சந்தித்துப்பேசினார். அப்போது, சிவசேனா ஆட்சி  அமைக்க இன்னும்48 மணிநேரம் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஆளுநர் கோஷியாரி ஏற்க மறுத்துள்ளார்

கூடுதலாக 40 நிமிடங்கள் மட்டுேம சிவசேனாவுக்கு ஆளுநர் அவகாசம் வழங்கினார். அதற்கு சிவசேனா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்