மகாராஷ்டிராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியைப் பவ்யமாக வரவேற்றார் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, தேர்தல் முடிவுக்கு பிறகு எதிரும் புதிரும் ஆனது. முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் தர வேண்டும் என்று சிவசேனா கோரியதால், பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது. மாநில முதல்வராக தாக்கரே குடுமத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே பதவியேற்றார். உத்தவ் தாக்கரே  முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


உத்தவ் தாக்கரே முதல்வரான பிறகு டெல்லி சென்று இன்னும் முறைப்படி பிரதமர் மோடியை உத்தவ்  தாக்கரே சந்திக்கவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மோடியுடன் தாக்கரே சந்திப்பு நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் மாநில காவல் துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க  நேற்று இரவு புனே விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் வரவேற்றனர்.


முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு உத்தவ் முதன்முறையாக பிரதமர் மோடியுடன் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது இருவரும் இயல்பாகவே பேசிக்கொண்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.