பாதுகாப்பிற்காக ராணுவத்தை நிறுத்தும் நிலைமைக்கு எங்களை ஆளாக்கிவிட வேண்டாம் என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் அம்மாநில மக்களை எச்சரித்துள்ளார் ,  மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் அத்துமீறி வரும் நிலையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார் . அதேபோல் மாநில மக்களுக்கு தேவையான பால் ,  பழங்கள் ,  காய்கறிகள்,  மருந்துகள் ,  உணவுப் பொருட்கள் ,  அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .  நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ,  அதை தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனாலும் மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் அதை முறையாக பின்பற்றாமல் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் பயணித்து வருகின்றனர் .  இது அம்மாநில போலீசாருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துமீறுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறியும் எச்சரித்து அனுப்புகின்றனர் .  ஆனாலும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த எந்த அச்சமும் இன்றி கூட்டம் கூட்டமாக சாலைகளில் காய்கறி மார்க்கெட்டில் பல்பொருள் அங்காடிகள் சகிதம் உலா வருகின்றனர் .  இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்துள்ளார் மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார்,   ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டும்  மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக திரிவது கவலையளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.   கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்தும் நிலைமைக்கு எங்களை மாற்றிவிட வேண்டாம் எனவும் அவர் மாநில மக்களுக்கு எச்சரித்துள்ளார் .  அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நிலைநாட்ட அமெரிக்க ராணுவத்தை நிறுத்தியுள்ள நிலையில்,  அமெரிக்காவைப் போல எங்களையும் மாற்றிவிட வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார் . 

இது அனைத்தையும் தாண்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது அம்மாநில மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ,  இந்நிலையில் காவல்துறை மற்றும் உயர்  அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள துணை முதலமைச்சர் அஜித் பவார் ,  கூட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் .  மக்கள் வீடுகளை விட்டு கடை வீதிகளுக்கு வருவதை தடுக்க மக்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,  இது பாரமதி மற்றும் வாய் நகரங்களில் வெற்றிகரமாக இது செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.  அதேபோல் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் முன்வந்து மூத்த குடிமக்கள் மாணவர்கள் குடிசை வாசிகள் மற்றும் வீடற்ற ஏழைகளை கவனித்துக்  கொள்ள வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார் .