மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிப்பதற்கு ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே முறையிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என  பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒருவழியாக சிவசேனா ஆட்சியமைத்தது. அம்மாமாநில முதல்வராக, கடந்த ஆண்டு நவம்பர், 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஆனால், அவர் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.எல்.சி.யாகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில முதல்வராக பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.,யாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும். ஆனால், சிவசேனா கட்சி தலைவராக மட்டுமே உத்தவ் தாக்கரே தற்போது வரை உள்ளார். வரும் மே மாதம் 27ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.எல்.சியாகவே இல்லாத உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி நீடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு 2 முறை அனுப்பி வைத்த பிறகும் அவர் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார். 

நேற்று முன்தினம் இதுதொடர்பாக ஆளும் மகா விகாஷ் கூட்டணி தலைவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசி அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரையின் மீது விரைவில் முடிவு எடுக்கும்படி வலியுறுத்தினர். இருப்பினும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். மே 28-ம் தேதிக்குள் கவர்னர் அவரை எம்.எல்.சி.யாக நியமிக்காவிட்டால் தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே இழக்க நேரிடும். இதன் காரணமாக உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவி ஊசலாடி கொண்டு இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், தனது முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்வதற்கு எம்.எல்.சி. பதவி விவகாரத்தில் தலையிட கோரி பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அப்போது பிரதமர் மோடியிடம் அவர், மகாராஷ்டிரா அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற பிரச்சனையை பிரதமர் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.