நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் சசிகலாவை எதிர்த்து தைரியமாக முன்வந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்த மாஃபா பாண்டியராஜன் இன்று தொகுதிக்கு சென்றார். அங்கு தொகுதிவாசிகள் அவருக்கு பலத்த மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் முன்னாள் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் முதல் ஆளாக நின்றார். பொதுமக்களின் விருப்பபடியே நான் செயல்படுவேன் என்பதில் திட்டவட்டமாக நின்றார். மேலும் ஓ.பி.எஸ்க்கு ஆதராவாக கூட்டணியை பெருக்க பல எம்.எல்.எக்களிடமும் எம்.பிக்களிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
சசிகலா அணியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கடந்த சில நாட்களாக தங்கவைக்கபட்டிருந்தனர். அப்போது தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே சுதந்திரமாக விடுங்கள். அவர்கள் தொகுதி மக்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்கட்டும். தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறமையை எம்.எல்.ஏக்கள் பெறவேண்டும் என ஆணித்தரமாக வெளிப்படையாக பேசிவந்தார்.
மேலும் ஓ.பி.எஸ்க்கு ஏராளமான பொதுமக்கள் ஆதரவு இருந்தால் பல்வேறு சினிமா பிரபலங்களும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கபட்டார்.
பின்னர், பொதுமக்களும், இளைஞர்களும், நெட்டிசன்களும் அனைத்து எம்.எல்.ஏக்களின் தொலைபேசி எண்களை கண்டறிந்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்குமாறு எம்.எல்.ஏக்களை வலியுறுத்தினர்.
ஆனால் எம்.எல்.ஏக்கள் சிலர் தொகுதிவாசிகளை திட்டிவிட்டு செல்பேசி இணைப்பை துண்டித்து விட்டனர்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று கொண்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்ததால் அதற்கான சிறப்பு சட்டபேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அமளிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தொகுதிவாசிகளும் பொதுமக்களும் எம்.எல்.ஏக்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றனர். பல்வேறு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொகுதி பக்கம் வரகூடாது என பல மிரட்டல்களும் எம்.எல்.ஏக்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை தொகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.இதனால் அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆவடி தொகுதி எம்.எல்.ஏவான மாஃபா பாண்டியராஜன் இன்று அவர் தொகுதிக்கு சென்றார். அங்கு அவருக்கு எந்தவித போலீஸ் பாதுகாப்பின் தேவையின்றி சுதந்திரமாக தொகுதியில் காலடி எடுத்து வைத்தார். அவருக்கு அவரது தொகுதிவாசி மக்கள் மாலை மரியாதையுடன் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.
சசிகலாவை எதிர்த்து மக்களின் மனிதனாக நின்ற ஒரே காரணத்திற்காக ஆவடி தொகுதியில் சிறந்த நாயகனாக உருவெடுத்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.
