முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக, இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பி.எஸ். வீட்டில் இன்று காலை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில், மதுசூதனன், மாபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் இரு அணியினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத்தான் அதிமுக கட்சி அலுவலகம் கிடைக்க வேண்டும் என்றார். ஓ.பி.எஸ். அணியில் எந்த அதிருப்தியும் இல்லை. இரு அணிகளும் ஒன்றுபட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறினார்.

கட்சி வளர்ச்சி தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது பொது பிரச்சனைகள் குறித்து பேசியதாகவும் மாபா. பாண்டியராஜன் கூறினார்.