சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது வரவேற்கத்தக்கது என்றும் விரைவில் அணிகள் இணைப்பு நடைபெறும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக இணைப்பு குறித்து 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வரும்.

எங்களின் முதல் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது வரவேற்கத்தக்கது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்க வேண்டும்.

கட்சியின் கட்டமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை கொச்சைப்படுத்த டிடிவி தினகரனுக்கு உரிமையில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.