ஆர்கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்பட பலரும் பிரச்சாரம் செய்தனர். அதேபோல், அதிமுக ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர்.

அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்பட பலரும் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்து உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த 6ம் தேதி ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, ஜெயலலிதா மறைந்தபோது, ராஜாஜி அரங்கில் வைத்த அவரது உடலை போல் மெழுகு பொம்மை செய்து, அதன் மீது தேசிய கொடியை போர்த்தி வைத்து இருந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா உருவம் போல் மெழுகு பொம்மை செய்து, அவரது பெயருக்கு குந்தகம் விளைப்பது மற்றும் தேசிய கொடியை அவமதிப்பு செய்தது என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைதொடர்ந்து மாபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி மற்றும் ஜெயலலிதா உருவ பொம்மை செய்து கொடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நிர்வாகி குப்பன் ஆகியோர் மீது ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையொட்டி நேற்று மாலை குப்பனை போலீசார் கைது செய்தனர். அதற்குள், மாபா பாண்டியராஜன் மற்றும் அழகு தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

மாபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர் பார்க்கிறார்கள். அதுவரை அவர்கள், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதாக, ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.