ஓசியில் சிகரெட் கொடுக்க மறுத்த டீ கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த மதுரை இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடைக்கு தீவைத்துவிட்டு அணைப்பது போல நாடகமாடியவர் சிசிடிவி காட்சியால் சிக்கிய பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


மதுரை, நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் பூமிநாதன். இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற போது நள்ளிரவு அவரது டீக்கடையில் தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து நெருப்பினை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள்ளாக கடை முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினருடன் தீயணைப்புத் துறையினரும் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதற்குள்ளாக கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் விளக்கும் போது..." நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர், அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குணசேகரன் என்பவர் டீகடைக்கு தீவைத்ததை கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து விசாரித்தபோது "கொரோனா ஊரடங்கு சமயத்தில் பூமிநாதனின் டீக்கடையில், இலவசமாக சிகரெட் கேட்டதாகவும் அதற்கு பூமிநாதன் தர மறுத்து விரட்டியதால் கடையை எரித்து விடுவேன்" என அவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற கடைக்கு தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளான்..தான் தீவைத்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க வந்ததால் அங்கிருந்த தன் மீது சந்தேகம் வந்து விடகூடாது என தானும் தீயை அணைப்பது போல நாடகமாடியதாக மதுரை இளைஞர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு தீவைப்பில் ஈடுபட்டதாக குணசேகரன் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தான் கேட்டு பொருட்கள் கொடுக்கவில்லையென்றால் அந்த கடைக்கு தீவைப்பதை இந்த "பயர்" குணசேகரன் வாடிக்கையாக செய்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டீ தராததால் கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்கள் டீகடைக்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.