சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாறும் வரை தற்காலிகமாக சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஜூன் 30ம் தேதி அன்று சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் ,ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் மனநல நிபுணர்கள் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகினர்.கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் காணொலி வழியாக ஆஜராகி," காவல்துறை நலத்தை மேம்படுத்தும்  விதமாக 100 கோடி மதிப்பில் திட்டம் உள்ளது. அதற்கு அரசு அரசாணையும் பிறப்பித்துள்ளது. காவல்துறையினரின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 

ஒவ்வொருவரின் தனிப்பட்ட மன அழுத்த அளவும் கண்காணிக்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிபிசிஐடி தரப்பில்  இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை, கிளைச்சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது.  தலைமைக் காவலர் ரேவதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், முருகன் ஆகியோர் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். மேலும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் சேகர் கூறியதாவது:- இப்போது கோவிட் -19 காரணமாக நல்வாழ்வு திட்டம் தடைபட்டுள்ளது.  மீதமுள்ள 26,000 காவல்துறையினர் விரைவில் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 

வெவ்வேறு அறிவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் காவல்துறையினரின் மன அழுத்தம் கணிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் காவல் துறையினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக 10.6 சதவீதத்தினர் பொதுவான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3 சதவிதம் பேர் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :- சாத்தான்குளம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கைகள் உள்ளது. மேலும் எதற்காக ஒரு மனிதர் இன்னொரு மனிதரை தாக்குகிறார், வளர்ச்சியடைந்த சமூகத்தில் நாம் இருந்துவரும் போதிலும் ஒரு மனிதர் மீதான தாக்குதலுக்கு காரணம், ஏற்கனவே  மனதில் கோபம் இருந்திருக்கவேண்டும், அந்த கோபம் அதிகரித்துதான் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும், ஏற்கனவே அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை இருந்திருக்க வேண்டும், அதனை கண்டுபிடிக்க வேண்டும்.

 

இன்னும் பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வர அச்சம் அடையும் நிலைதான் உள்ளது. காவல்துறையில் ஒரு சிலரை வைத்து மொத்த காவல்துறையினரை எடை போடகூடாது, 24மணி நேரத்தில் சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர், இதனால் பொதுமக்கள் ஒரளவுக்கு நம்பிக்கை பெற்றுள்ளனர். இதேபோல் அனைத்து வழக்குகளிலும் செயல்பட வேண்டும். சாத்தான்குளம் விவகாரம் போன்று இனி எந்த விவகாரமும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். தொடர்ந்து வழக்கு சம்பந்தமாக ரிமாண்ட் மற்றும் பலவற்றிற்கான அதிகாரங்களைக் கையாள்வதற்கு சி.ஜே.எம். க்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும் சாத்தான்குளம்  பிரச்சினையில் விரிவான உத்தரவுகள் வெளியிடபடும் என உத்தரவிட்ட நீதிபதிகள். அரசு தடயவியல் பரிசோதனைகளையும் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.