தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கில் அவர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் நடத்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக மெகா கூட்டணி அமைத்தும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டார். அவரது எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். 

இதில், தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 5,63,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, சுமார் 2,15,934. வாக்குகள் மட்டுமே பெற்றதோடு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி முறைகேடு செய்திருப்பதாகவும், பணபலத்தை இறக்கி வெற்றி பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

இந்நிலையில், கனிமொழி வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவில் கனிமொழியின் கணவர் வருமானம் குறித்த தகவலை வேட்புமனுவில் குறிப்படவில்லை என மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கின் விசாரணையின் போது இந்திய தேர்தல் ஆணையமும், திமுக எம்.பி. கனிமொழியும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.